மின் துண்டிப்பு குறித்து நீதியான விசாரணை! – நாடாளுமன்றில் அரசு உறுதி.

“நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதைப் பொறுப்புடன் தெரிவிக்கின்றோம்.”

இவ்வாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டமை தொடர்பில நாடாளுமன்றத்தில் நேற்று (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மின் துண்டிப்பு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோன்று ஒரு மின் விநியோகக் கட்டமைப்பு மாத்திரம் செயலிழந்திருந்தால் எவ்வாறு முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போயிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொழில்நுட்ப ரீதியாக ஆராய வேண்டிய விடயம் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுவரை நாம் மின் உற்பத்தியை நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூலம் முன்னெடுக்கின்றோம். அதன் மூலம் 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஏனைய அனைத்து மின்சாரத்தையும் நாம் நீர் மின் உற்பத்தி மூலமே பெற்று வருகின்றோம். அந்தவகையில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விநியோக கட்டமைப்பிலேயே இந்தச் செயலிழப்பு இடம்பெற்றுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி இருந்தது. எனினும், 300 மெகாவோட் மின்சாரமே இருந்தது. அச்சமயம் நுரைச்சோலை மின் விநியோகக் கட்டமைப்பும் செயலிழந்தது. அந்தவகையில் அனைத்து விநியோகக் கட்டமைப்புகளும் செயலிழந்தன.

இவற்றை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. சிறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே நிலைமையைச் சரி செய்ய முடிந்தது. மின்சார சபையும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

அதேவேளை நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவிருந்த பொல்பிட்டிய, கொத்மலை ஆகியவற்றின் நடவடிக்கைகள் வருடக்கணக்கில் தாமதமாகின.

அதனால் ஏன் இந்தளவு காலதாமதம் ஏற்பட்டது என அது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்குப் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் 5 இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லாமலுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

எனினும், இந்த வருடத்தில் அனைத்து நாட்களும் எந்தத் தடையுமின்றி நாம் மின்சாரம் வழங்கினோம். எதிர்பாராத விதமாகவே இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் மிகவும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.