விஜயகாந்த் மறைவு: தீவுத்திடலில் அலைகடல் என திரளும் மக்கள்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அலைகடல் என மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விஜயகாந்த்தின் உடல் நேற்று அவரது சாலிகிராமம் வீட்டிலிருந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்ததா, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்த வந்த மக்களும், முக்கிய பிரமுகர்களும் இடிபாடுகளில் சிக்கினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், உடனடியாக தமிழக அரசு முடிவெடுத்து, விஜயகாந்த் உடல் நேற்று இரவு தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.

அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், மக்கள் நெரிசலின்றி, விஜயகாந்த்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இன்று அதிகாலை முதலே அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னை வந்து, விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நேற்று கடும் நெரிசலுக்கு இடையே, அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று காலை நேர்த்தியாக வரிசைகள் அமைக்கப்பட்டு, மக்கள் எந்த நெரிசலும் இல்லாமல் விரைவாக அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.