தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக 2வது முறையாக பி.எஸ்.ராமன் நியமனம்!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக, அரசுக்கு சண்முக சுந்தரம் கடிதம் அனுப்பினார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய தமிழ்நாடு அரசு, புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமிக்க பரிந்துரைத்தது. இதனை ஏற்று, தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றும் பி.எஸ்.ராமன், 2004 ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரை கருணாநிதி ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன், இரண்டாவது முறை தற்போது பொறுப்பேற்கிறார்.

1960-ஆம் ஆண்டு பிறந்த பி.எஸ்.ராமன், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். அரசியல் சட்டம், உரிமையியல், வணிகம், குற்றவியல், நேரடி வரிகள், அறிவுசார் உரிமை தொடர்பான வழக்குகளில் பி.எஸ்.ராமன் ஆஜராகி உள்ளார். இவரது தந்தையான வி.பி.ராமன், 1970களில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இவரின் சகோதரர் பிரபல நடிகர் மோகன் ராமன் ஆவர்.

Leave A Reply

Your email address will not be published.