துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தள்ளுபடி! – கோட்டாவின் உத்தரவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை இரத்துச் செய்யுமாறு உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட மேலும் நால்வருக்கு 2016 ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட ‘ட்ரயல் அட் – பார்’ நீதிமன்றம் 2 -1 ஆகப் பிரிந்து மரணதண்டனைத் தீர்ப்பை வழங்கியது.

2018 ஒக்டோபரில் இந்தத் தீர்ப்புத் தொடர்பான மேன்முறையீட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவரை விடுவித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம், துமிந்த சில்வா உட்பட ஏனைய நால்வரின் மரணதண்டனைத் தீர்ப்பையும் ஏகமனதாக உறுதி செய்தது.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இந்தப் பொதுமன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குட்படுத்தி மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, மனைவி சுமணா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மனு முதலில் விசாரிக்கப்பட்டது. அந்த மனு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா மீண்டும் கைதாகி மரணதண்டனைக் கைதிகளுக்கான சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

அந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டே துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது என்று இந்த வழக்கையொட்டி கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமன்னிப்பை வழங்கிய வேளை கோட்டாபய உரிய நடைமுறைகளை – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை என்றும் நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கிய வேளை தேசத்தின் நலனைக் கருத்தில் எடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். அவர் தேசத்தின் எந்த நலனைக் கருத்தில் எடுத்துள்ளார்?
இரண்டு தரப்பினர் இது குறித்து தெளிவுபடுத்தலாம்.

முதலாவது – முன்னாள் ஜனாதிபதியே தேசத்தின் நலன்கள் என்னவென்பதைத் தெரிவிக்கலாம். இது தொடர்பில் தனது சத்தியக் கடதாசியில் அவர் தெரிவித்துள்ள கருத்தின் விளக்கம் யாது என்பது அவருக்கே தெரியும்.

இரண்டாவது – ஜனாதிபதியின் ஆவணம் ஜனாதிபதி தனது பதவியைத் துறந்த பின்னரும் ஜனாதிபதி செயலகத்திலேயே இருந்திருக்கும்.

சட்டமா அதிபரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எவையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கான காரணம் அதுதான் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை.

இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தைக் கூட கண்டறிய முடியாமலுள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை அவராலும் அவரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களாலும் உறுதிப்படுத்த – நியாயப்படுத்த முடியவில்லை.

தேசத்தின் நலனைக் கருத்தில்கொண்டே குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பொதுமன்னிப்பை முன்னாள் ஜனாதிபதி வழங்கினார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொதுமன்னிப்பை வழங்கிய வேளை முன்னாள் ஜனாதிபதி உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன் காரணமாக சட்டம் அவர் எந்த விடயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

இதனால் முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தில் தனது விருப்புரிமையைச் சரியாகப் பயன்படுத்தினார் என்று தெரிவிக்க முடியாது.” – என்று நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.