அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியவை உடன் நீக்குக! கையெழுத்து சேகரிக்கும் வேட்டை ஆரம்பம்.

கெஹலிய ரம்புக்வெலவை சுற்றாடல் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், சுற்றாடல் துறை அமைச்சர் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை என்று தெரிவித்து சில சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொது மனுவில் கையெழுத்து சேகரிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

கொலைக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்து உட்கொள்வதை மறுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் வினவியிருந்தன.

இதற்குப் பதிலளித்த அந்த வைத்தியசாலையின் பேச்சாளர், “அரச வைத்தியசாலையில் மருந்துகளை எடுக்க மறுத்தல் அல்லது தனியார் வைத்தியசாலை செல்லுதல் போன்ற எந்தக் கோரிக்கையும் இதுவரை அமைச்சர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை” – என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.