பாகிஸ்தான் தேர்தல் , களவாடப்படும் வெற்றி! (Video)

உலகில் ஐந்தாவது மிகப் பெரிய சனத்தொகையைக் கொண்ட நாடான பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 266 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள போதிலும், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையில் நிச்சயமற்ற ஒரு நிலை தோன்றியுள்ளது.

சுயேட்சையாகப் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான நீதிக்கான பாகிஸ்தான் இயக்கம் PTI , தமது வெற்றி வாய்ப்பு திட்டமிடப்பட்டுத் தடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது. அதே வேளை , தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகப் பல வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் ஊழலின் நிழல் படியாத அரசாங்கமோ, அரசியல் கட்சியோ இருக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை.


பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஊழலோடு சேர்த்து இராணுவத்தின் தலையீடும் அதிகம். எந்தவொரு தேர்தலானாலும், இராணுவத் தலைமை கை காட்டும், அல்லது தீர்மானிக்கும் அல்லது ஆதரவு வழங்கும் கட்சியே ஆட்சியில் அமர முடியும். இராணுவத் தலைமைக்கு ஆட்சியாளர்களின் மீது, என்று அதிருப்தி ஏற்படுகிறதோ அப்போது ஒன்றில் ஆட்சி மாற்றியமைக்கப்படும், அல்லது இராணுவத் தலைமையே ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும். 1947ம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இன்றுவரை எந்தவொரு தலைமை அமைச்சரும் தனது ஐந்து வருடப் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த வரலாறு அந்த நாட்டில் இல்லை.

தற்போதைய தேர்தலில் நீதிக்கான பாகிஸ்தான் இயக்கக் கட்சியின் தலைவரான இம்ரான் கான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சியும் தடை செய்யப்பட்டு உள்ளது. 1996ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த இம்ரான் கான் பாரம்பரியக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்பவற்றுக்குப் போட்டியாளராக விளங்கினார். படிப்படியாக அரசியலில் முன்னேறிய அவர் 2018ல் ஆட்சியைப் பிடித்தார். அவர் ஆட்சியைப் பிடிப்பதற்கு அப்போது இராணுவத் தலைமை ஆதரவாக இருந்தது. ஆனாலும் 2022 ஏப்ரலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டுவந்த, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிதாகப் பதவியேற்ற அரசாங்கத்தினால் அன்று முதல் அவரும் அவரது கட்சியும் வேட்டையாடப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது.

இறுதியாக நடைபெற்று முடிந்த தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது, மூன்று முறை தலைமை அமைச்சர் பதவியை வகித்த நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக், நவாஸ் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்வு கூறல்கள் இருந்தன. இராணுவத் தலைமையும் இந்தக் கட்சிக்கே தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. ஆனால் எதிர்வு கூறல்கள், கருத்துக் கணிப்புகள் யாவற்றையும் பொய்யாக்கி இம்ரான் கான், தலைமையிலான நீதிக்கான பாகிஸ்தான் இயக்கக் கட்சியின் உறுப்பினர்களே அதிக எண்ணிக்கையான ஆசனங்களை வென்று அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளனர். கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டியிருந்தது.

தேர்தல் முடிவுகளின் படி நீதிக்கான பாகிஸ்தான் இயக்கக் கட்சியின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்ட 93 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேவேளை பாகிஸ்தான் முஸ்லிம் லீக், நவாஸ் கட்சியின் சார்பில் 75 பேரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் 54 பேரும் தெரிவாகி உள்ளனர். ஏனைய ஆசனங்களை உதிரிக் கட்சிகளும், சுயேட்சைகளும் பெற்றுக் கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, சிறைச்சாலையில் இருந்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றிய இம்ரான் கான் , தனது கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்திருந்தார். அதேவேளை நவாஸ் ஷெரிப் தான் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறியிருந்தார். இது தொடர்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனும் ஏனைய உதிரிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி இந்த அணி 150 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகி வருவதாகத் தெரிகின்றது.

தேர்தல் தொடர்பில் செய்திகளை வெளியிட்டுள்ள மேற்குல ஊடகங்கள் தேர்தலில் பல்வேறு மோசடிகள், முறைகேடுகள் இடம் பெற்றதாகவும் இவற்றில் இராணுவம் சம்பந்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவையும் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. தேர்தல் முடிவுகள் பாகிஸ்தானின் இராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பாரிய தோல்வி எனப் பல ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

முதல் தடவையாக பாகிஸ்தானிய வாக்காளர்கள் இராணுவத்தின் கோரிக்கையைச் செவிமடுக்காமல் விட்டுள்ளனர். இது ஒரு மாற்றத்துக்கான அறிகுறி எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரகாரம் 266 உறுப்பினர்கள் நேரடியாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். கட்சிகள் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில் 60 பெண்களும், இஸ்லாமியர்கள் அல்லாத 10 உறுப்பினர்களும், நியமன அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் , நவாஸ் கட்சியின் தலைமையில் ஆட்சி அமையப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தாலும், பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற இம்ரான் கானின் கட்சிக்கு , மக்கள் வழங்கிய ஆணையைப் புறந் தள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. அத்தகைய ஒரு நிலையில் பொதுமக்கள் கிளர்ந்தெழும் நிலை உருவானால் அது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த எதிர்காலத்துக்குமே ஆபத்தானதாக அமையும்.

அது மாத்திரமன்றி எந்தவொரு பொதுவான கொள்கையும் இன்றி , அமையப் போகும் சந்தர்ப்பவாதக் கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.

மக்கள் ஆணையை மதித்து தனது நிலைப்பாட்டை இராணுவம் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பது தற்போது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. பெரும்பான்மை மக்களின் விருப்புக்கு மாறாக தனது விசுவாசிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்க்கப் போவதன் விளைவுகளை பாகிஸ்தான் மக்களே அனுபவித்தாக வேண்டும்.

‘களவாடப்பட்ட தமது வெற்றிக்கு நீதி கேட்பதற்காக, தாம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போராடப் போவதாக இம்ரான் கானின் கட்சி அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் எதிர்காலம் என்பது நிச்சயமற்றதாகவே இருக்கப் போகின்றது என்பது வெள்ளிடை மலை.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை வாக்களிப்பது என்னவோ பொதுமக்களாகவே இன்றுவரை இருந்து வருகின்றனர். அவர்களால் வாக்களிக்க மாத்திரமே இயலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க அவர்களால் இயலாது என்பதற்கு பாகிஸ்தானின் தற்போதைய நிலவரம் மற்றொரு சான்றாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.