ரயில் மோதி தண்டவாளத்தில் நின்றிருந்த 12 பேர் பலி… ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஜார்கண்ட் மாநிலம் கலாஜாரியா ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று  மாலை ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது கலாஜாரியா ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதில் இருந்த பயணிகள் தண்டவாளம் அருகே நின்றிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த மற்றொரு ரயில் அந்த பயணிகள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். அதில் 2 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும் பலரின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் இறப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஜம்தாரா துணை ஆணையர் தெரிவித்தார்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்தாரா எம்.எல்.ஏ இர்பான் அன்சாரி, விபத்து குறித்து அறிந்ததாகவும், ஜம்தாராவுக்குச் செல்வதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “அதற்கு காரணமானவர்களை அடையாளம் காண நான் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். சட்டசபையிலும் பிரச்சனையை எழுப்புவோம். இறந்தவர்களை இன்னும் அடையாளம் காணவில்லை” என்றார்.

இதனிடையே பயணிகள் ரயிலில் தீப்பிடித்ததை அடுத்து தண்டவாளத்தில் குதித்து நின்றிருந்தவர்கள் மீது, மற்றொரு ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அச்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.