சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் , ஜப்பானில் பெரிய மோசடி?

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்று, ஜப்பானில் 26,000 பேரை ஏமாற்றி 135 பில்லியன் யென் (1.2 பில்லியன் வெள்ளி) மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்கை பிரீமியம் இன்டர்நே‌ஷனல் எனும் அந்நிறுவனம், ஜப்பானின் ஆகப் பெரிய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. ஃபுக்குவோக்கா நகர காவல்துறையினர் இத்தகவல்களை வெளியிட்டனர்.

ஜப்பானின் நிதிச் சேவை அமைப்பின் அனுமதியின்றி ஸ்கை பிரீமியம் இன்டர்நே‌ஷனல், லயன் பிரீமியம் என்றழைக்கப்படும் நிதித் திட்டத்தை விற்கும் நோக்குடன் ஆலோசனை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஸ்கை பிரீமியம் இன்டர்நே‌ஷனலின் நான்கு உயரதிகாரிகளை ஃபுக்குவோக்கா காவல்துறை கைது செய்தது.

45 வயது அத்சு‌ஷி சைத்தோ அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்றும் 59 வயது ‌ஷினோபு மிஸு‌ஷிமா அதன் தலைமை விற்பனை அதிகாரி என்றும் ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டன. கைதானோரில் அவ்விருவரும் அடங்குவர்.

ஆறு மாநிலங்களில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து ஸ்கை பிரீமியம் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். முதலீடு செய்த பிறகு பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போனவர்கள் புகார் கொடுத்தனர்.

ஸ்கை பிரீமியத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகளின் தொடர்பில் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. ஹொக்காய்டோ, தோக்கியோ, ஒசாக்கா உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஜப்பானியச் சட்டப்படி, குற்றம் சுமத்தாமல் சந்தேக நபர்களை 23 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கலாம். அத்தகையோர் வேறு குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும்போது அவர்கள் கூடுதல் காலத்துக்கும் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம்.

ஸ்கை பிரீமியம் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகம், ‌ஷென்டன் வேயில் உள்ள எஸ்பிஎஃப் சென்டர் நிலையத்தின் 27வது தளத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று (27 பிப்ரவரி) அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

Leave A Reply

Your email address will not be published.