திட்டமிட்டபடி யாழில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான நாளை சனிக்கிழமை நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் யாழ். மாவட்டத்தில் நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருந்த நிலையில் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று முற்பகல் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட தடையுத்தரவு கோரிய மனுத் தாக்கலை அடுத்து அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியாது என்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் இன்று பகல் யாழ். நல்லூரிலுள்ள வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா ஊடகங்களைச் சந்தித்தார்,

இதன்போது நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்த போதிலும் எங்கு நடைபெறும் என்ற விடயத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.