புட்டின் நல்லவரா? கெட்டவரா? : சண் தவராஜா

‘புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை பலத்த விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் கட்டுரை வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது, அவர்கள் மத்தியில் ஒரு சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே ஒரு எழுத்தாளனின் வெற்றி. “எனது எழுத்து உலகின் ஏதாவதொரு மூலையில் இருக்கும் வாசகனின் சிந்தனையில் ஒரு பொறியை ஏற்படுத்துமானால், மாற்றத்தை ஏற்படுத்துமானால் அதுவே எனது வெற்றி” என நான் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த வகையில் இந்தக் கட்டுரை தொடர்பிலான கருத்தாடல்கள் எனது கட்டுரைக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவ்வகையில் இந்தக் கட்டுரைக்கான தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன். என்னைப் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எவரும் விஞ்ஞானிகளோ, கண்டுபிடிப்பாளர்களோ அல்ல. தமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு – தமது கருத்தியல் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு – அலசல்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள், அதனை எழுத்தில் வடிக்கிறார்கள், ஊடகங்கள் வழியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். அவ்வாறான எழுத்துக்கள் அனைத்து வேளைகளிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதோ, மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதோ, வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் திருப்தி செய்ய வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாது. தந்தை பெரியார் கூறியதைப் போன்று “நானே சொன்னாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள்; உங்கள் பகுத்தறிவைக் கொண்டு அதனைப் பகுத்து ஆய்ந்து சரியானால் ஏற்றுக் கொள்ளுங்கள்; தவறானால் ஒதுக்கி விடுங்கள்” என்ற மேற்கோள் பத்தி எழுத்துகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும்.

என்னுடைய கட்டுரைக்கான விமர்சனமாக ஒருவர் நான் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரையை வடித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எங்களைப் போன்றவர்களுக்கு தகவல்கள் பொது ஊடகங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எமது கட்டுரைகள் அமைகின்றன. ஊடகங்கள் தங்களைச் சுயாதீனமானவை எனக் கூறிக் கொண்டாலும் அவைகளும் சார்பு நிலை மற்றும் நலன்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன என்பதில் ஒளிவு மறைவு இல்லை. பக்கச் சார்பு அற்ற ஊடகங்கள் என எவையும் இல்லை, அவ்வாறு இருக்கவும் முடியாது.

அதேவேளை, பொதுவான செய்தித் தளங்கள் என அறியப்பட்ட ஊடகங்கள் பெரும்பாலும் மேற்குலகின் கருத்தியலையே பிரதிபலிக்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. இது ஒரு வகைப் பக்கச் சார்பு. இதற்குச் சரியான எடுத்துக்காட்டாக 2003இல் நிகழ்ந்த ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கு முன்னதாக மேற்குலக ஊடகங்கள் தொடர்ச்சியாக ஈராக் நாட்டுக்கும், அதன் மேனாள் அதிபர் சதாம் ஹு சைனுக்கும் எதிராக வெளியிட்ட செய்திகளைக் கூற முடியும். “ஈராக்கிடம் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உள்ளன” எனத் திரும்பத் திரும்பக் கூறப்பட்டன. படையெடுப்பின் பின்னர் அத்தகைய எதுவும் இல்லையென நிரூபிக்கப்பட்ட போதிலும், பொய்ச் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அதற்காக இன்றுவரை மனம் வருந்தவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

அதேவேளை, மேற்குலகுக்கு எதிரான கருத்தியலைக் கொண்ட ஊடகங்களை மற்றொரு தரப்பு சார்பாகப் பார்க்க முடியும்.

இத்தகைய இரண்டு வகை ஊடகங்களுள் ஒன்றை மாத்திரம் தொடர்ந்து பார்ப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் பக்கச் சார்பு உள்ளவர்களாகவே இருக்க முடியும்.

எழுத்தாளர்கள் இரண்டு பக்க ஊடகங்களையும் பின்தொடர்ந்தால் மாத்திரமே ஓரளவேனும் பாரபட்சமற்ற செய்திகளை, அலசல்களை வழங்க முடியும்.

எனது கட்டுரை தொடர்பில் கருத்து வழங்கிய மற்றொரு நண்பர் புட்டினை ஹிட்லருடன் ஒப்பிட்டு இருந்தார். புட்டின் தொடர்பில் மேற்குலக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை மாத்திரம் வாசிக்கும் ஒருவர் அவ்வாறுதான் நினைக்க முடியும். உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடலாம் என்ற ஊகங்கள் வெளிவருவதால் ஒருவேளை அவர் அவ்வாறு கருதவும் இடமுண்டு. யூத இனத்தைச் சேர்ந்த ஸெலன்ஸ்கியை எதிர்ப்பதால் புட்டின் யூத இனத்துக்கே எதிரானவர் என்று மேற்குலக அறிஞர்கள் யாராவது எங்காவது சொல்லி வைத்திருக்கிறார்களோ என்னவோ?

உக்ரைன் போரின் தோற்றுவாய் என்ன என்பது உலகம் அறிந்த விடயம். ரஸ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் அரசுத் தலைவர் விக்டர் யனுக்கோவிச் மேற்குலகின் நேரடி ஆதரவுடன் 2014இல் பதவி கவிழ்க்கப்பட்ட போதே இந்தப் போருக்கான அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.

தவிர, 1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்ட போதில் அதன் முன்னைநாள் உறுப்பு நாடுகளை தனது இராணுவக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதில்லை என அமெரிக்கா வழங்கிய உறுதி மொழி பற்றியோ, அந்த உறுதி மொழியை வழக்கம் போன்று காற்றில் பறக்க விட்டது பற்றியோ யாரும் கவலை கொள்வதில்லை. அதுவொரு மறக்கப்பட்ட சங்கதியாகி விட்டது.

அமெரிக்கா செய்வது எல்லாமே சரியானவை. அதன் எதிர் முகாம்களில் உள்ள ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் செய்வது எல்லாமே பிழையானவை என்ற சிந்தனை கொண்டவர்களே இன்றைய உலகில் அதிகமாக உள்ளனர். உலகிலேயே அதிக நாடுகளில் படைத்துறைத் தலையீட்டை நிகழ்த்திய ஒரேயொரு நாடு அமெரிக்கா என்பது பற்றியோ, உலகின் அதிகமான நாடுகளில் படைத் தளங்களைக் கொண்டுள்ள நாடும் அதுவே என்பது பற்றியோ இத்தகையோருக்குக் கவலையும் இல்லை, கரிசனையும் இல்லை.

சிறி லங்காவில் இருந்து அழைப்பை மேற்கொண்ட ஒரு நண்பர் என் போன்றோரால் மேற்குலகில் இருந்து கொண்டு இதுபோல் தைரியமாக கட்டுரை எழுத முடிகின்றது என்றார். இதுவும் ஒரு வகையில் மிகை மதிப்பீடே. கீழைத்தேய நாடுகளோடு ஒப்பிடும் போது மேற்குலகில் ஜனநாயக உரிமைகள் ஓரளவு உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டாலும், ஆட்சியாளர்கள் அனுமதிக்கும் வரையே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு அமெரிக்காவுக்கு நாடுகடத்தலை எதிர்கொண்டு பிரி;த்தானியாவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூலியஸ் அசாஞ்சே விடயம்.

முடிவாக, ரஸ்ய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புட்டின் எமக்கு விருப்பமானவரா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அவர் மக்கள் ஆதரவுடன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அந்தத் தகவலை அடியொற்றியே எனது கடந்த வாரக் கட்டுரை அமைந்திருந்தது.

புட்டின் நல்லவரா அல்லது ஹிட்லரைப் போன்றவரா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். அந்த நாள் வரை, உலகோடு சேர்ந்து நாமும் காத்திருப்போம்.

Leave A Reply

Your email address will not be published.