அதிநவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை, ஒடிஸாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இச்சோதனை புதன்கிழமை மாலை நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அணு ஆயதப்பிரிவு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) இணைந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையை ஒடிஸாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் ஏப்ரல் 3-ஆம் தேதி இரவு வெற்றிகரமாக சோதனை செய்தன.

1,000 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரையில் இலக்குகளை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சென்சாா் கருவிகள் சேகரித்த தரவுகளின்படி இந்த ஏவுகணை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது. இந்நிகழ்வில் முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான், டிஆா்டிஓ உயா் அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா் என தெரிவிக்கப்பட்டது.

அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக, டிஆா்டிஓ, அணு ஆயுதப் பிரிவு மற்றும் ராணுவத்தினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த ஏவுகணை நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மற்றுமொரு அங்கமாக செயல்படும் என்றாா்.

தொடா் சோதனை வெற்றிகள்: ‘திவ்யாஸ்திரா’ திட்டத்தின்கீழ் அதிநவீன அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் திரும்பக் கூடிய வகையிலான எம்ஐஆா்வி என்ற நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 5,000 கி.மீ வரையிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனுடையதாகும்.

அதேபோல் 700 கி.மீ முதல் 3,500 கி.மீ வரையிலான இலக்குகளை தாக்கக் கூடிய அக்னியின் முதல் நான்கு ஏவுகணைகள் ஏற்கெனவே ராணுவத்தின் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு வகையிலான ஏவுகணைகளை இந்தியா தொடா்ந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

திருட்டு மாடுகளை கொண்டு சென்ற யாழ்.பொலிஸ் உத்தியோகத்தர் STFடம் சிக்கினார்!

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை.

ஏர் கனடா நிறுவனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு விமானச் சேவை வழங்கத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்த வேண்டும் – சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

உபரில் ஆட்டோ புக் செய்தவருக்கு ரூ.7.66 கோடி கட்டணம்.. ஷாக்கான வாடிக்கையாளர்!

இனி.. மகளிர் உரிமைத் தொகையில் வரும் மாற்றம் – உதயநிதி முக்கிய தகவல்!

Leave A Reply

Your email address will not be published.