நாமலுக்குக் கிடைத்த பதவியால் கடும் அதிருப்தியில் பஸில் – சமல்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையால் பஸில் ராஜபக்ஷவும் சமல் ராஜபக்ஷவும் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

நாமல் ராஜபக்ச தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட மொட்டுக் கட்சியின் கூட்டத்தில் பஸில் ராஜபக்ஷவும் சமல் ராஜபக்ஷவும் கடும் சோகமாகக் காணப்பட்டார்கள்.

அதற்குக் காரணம் நாமல் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டமைதான். ராஜபக்ஷ சகோதரர்கள் யாரும் இந்தப்
பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என்று சமல் எவ்வளவு எடுத்துக் கூறியும் நாமலை நியமித்துவிட்டார்களே என்ற கவலைதான் அவருக்கு.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கூடிப் பேசினர்.

“நாமலின் இந்த நியமனம் காரணமாக மொட்டுக் கட்சிக்குள் பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது. நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வருவதால் இரண்டு அணிகளும் எமக்குத் தேவை. நாம் இரண்டு தரப்பையும் அணைத்துக்கொண்டு நடுநிலையாகச் செல்ல வேண்டும்.” – என்று ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் முடிவெடுத்தனர்.

– இப்படி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.