திருமலையில் கோர விபத்து! 6 வயது சிறுமி பரிதாபச் சாவு!! (Photos)

திருமலையில் கோர விபத்து!
6 வயது சிறுமி பரிதாபச் சாவு!!
– 4 வயது சிறுவன் படுகாயம்; இன்று அதிகாலை பெருந்துயரம் 
யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரின் குடும்பம் பயணித்த கார், திருகோணமலையில் விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கோர இடம்பெற்றுள்ளது என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி – அல்வாய் மேற்கு, திக்கம் பகுதியைச் சேர்ந்த டயலொக் நிறுவனத்தின் வடக்கு – கிழக்கு பிராந்தியப் பொறியியலாளர் சிவயோகநாதன் நிதர்சன் (வயது 35), அவரது மனைவியான வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் நிதர்சன் தர்சினி (வயது 35) ஆகிய இருவரும் தமது இரண்டு பிள்ளைகளுடன் காரில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து – வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் திக்கம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவியான நிதர்சன் அதிதி (வயது 6) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது சகோதரனான நிதர்சன் அதிரேஷ் (வயது 4) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து இடம்பெற்றபோது சிறுமியும், சிறுவனும் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணித்துள்ளனர்.

அதேவேளை, காரைச் செலுத்திச் சென்ற தந்தையும், முன் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணித்த தாயும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.