ஐஸ் கட்டி மழையில் சிக்கிச் சேதமடைந்த விமானம்

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவைச் (Vienna) சென்றடையவிருந்த விமானம் ஒன்று ஆலங்கட்டி மழையில் (ஐஸ் கட்டி மழை) சிக்கி மோசமாகச் சேதமடைந்தது என்று ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் (Austrian Airlines) நிறுவனம் கூறியது.

அதில் விமானத்தின் முன்புறப் பகுதி உடைந்தது; விமானி அறையில் இருக்கும் சன்னல்களில் விரிசல்கள் ஏற்பட்டன.

உதவிக்கு அழைப்பு விடுத்த பின்னர் வியன்னா விமான நிலையத்தில் அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

சம்பவத்தில் 173 பயணிகளுக்கும் 6 சிப்பந்திகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

பால்மா டி மல்லோர்காவுக்குச் (Palma de Mallorca) சென்றவர்களை விமானம் வியன்னாவுக்குத் திருப்பியழைத்துக் கொண்டுவரும்போது சம்பவம் நேர்ந்தது.

ஆலங்கட்டி மழை குறித்து முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை என்று ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆலங்கட்டி மழைபெய்த பகுதியை விமானம் கடப்பதற்குச் சுமார் 2 நிமிடங்கள் எடுத்ததாகப் பயணி ஒருவர் ABC News செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அண்மை வாரங்களில் கனத்த மழை காரணமாக ஆஸ்திரியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.