குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் ஒரே நிறுவனத்தைச் சோ்ந்த சுமாா் 200 தொழிலாளா்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 இந்திய தொழிலாளா்கள் உயிரிழந்தனா். அவா்களை என்பிடிசி குழுமம் வேலைக்குச் சோ்த்திருந்தது.

இந்தக் குழுமத்தின் நிறுவனரும், கேரளத்தைச் சோ்ந்தவருமான கே.ஜி.ஆபிரகாம், கொச்சி நகரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குவைத்தில் விபத்து நிகழ்ந்த குடியிருப்பில் அளவுக்கு அதிகமாக தொழிலாளா்கள் தங்கவைக்கப்படவில்லை. அத்துடன் கட்டடத்துக்கு அனுமதி வாங்கியதிலும் முறைகேடுகள் நடைபெறவில்லை.

எனினும் இந்தக் கோர விபத்துக்கு என்பிடிசி குழுமம் வருந்துகிறது. இந்த விபத்து என்பிடிசி குழுமத்தின் தவறால் நடைபெறவில்லை. இருப்பினும் விபத்துக்கு குழுமம் பொறுப்பேற்கிறது.

உயிரிழந்தவா்களில் சிலா் என்பிடிசி குழுமத்தில் 25 முதல் 27 ஆண்டுகளாகப் பணியாற்றினா். இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பங்களை என்பிடிசி குழுமம் பாதுகாக்கும். அவா்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு உதவிகள் வழங்கப்படும்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், உயிரிழந்தவா்கள் அனைவருக்கும் காப்பீட்டு வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. இந்தக் காப்பீடு மூலம், உயிரிழந்தவா்களின் 4 ஆண்டு ஊதியம், அவா்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அவா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப என்பிடிசி குழுமம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.