திரை விமர்சனம் :  க/பெ. ரணசிங்கம்

ஒரு வரியில் கூறினால், வெளிநாட்டுக்கு (டுபாய்) வேலைக்கு போய் அங்கு இறந்து போன கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வரப் போராடும் ஒரு சாதாரண கிராமத்துப்பெண்ணின் கதை தான் க/பெ. ரணசிங்கம் (கணவர் பெயர் ரணசிங்கம்) .

ராமநாதபுரத்திலுள்ள கிராமங்களில் நிகழும் தண்ணீர் பிரச்சினையில் இருந்து கதை விரிகிறது.  அடுத்த சீனிலிருந்து கதையின் பின்புலமான மனிதர்களை அறிமுகப்படுத்தி  விட்டார் இயக்குனர்.  ஒரு கிராமத்திலுள்ள மகன், மருமகள், மகள், பேரப்பெண் குழந்தையடங்கிய சாதாரணக்குடும்பம் அது.  மகன் வெளிநாட்டில் (மத்திய கிழக்கு) வேலை பார்க்க சென்றுள்ளார்.  குழந்தைக்கு காதுகுத்தல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.  அங்கு வந்த  காவல் அதிகாரிகள்,  வெளிநாட்டில் இருக்கும் சகோதரன் இறந்ததாக தங்கையிடம் தெரிவிக்கின்றனர்.  அதுவரை மகிழ்ச்சியாக இருந்த  வீடு சோகத்தில் ஆள்கிறது. அதிலிருந்து கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.  எட்டு மாதமாகியும் தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரஇயலாத   மனைவி,  பெரும் சட்ட போராட்டம் ஒன்றை  நடத்துகிறார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த துயர்மிகு போராட்ட சம்பவங்களின் தொகுப்பு  ஒரு பக்கம் முன்னேற,  பின்னோட்டமாக ரணசிங்கம் யார், இவர்களின் காதல், கல்யாணம்,  ரணசிங்கத்தை வெளிநாட்டிற்கு அனுப்பிய குடும்ப சூழல் , என கதை சம்பவங்களின் மேல் சம்பவங்களாக நகர்கிறது.

கதைக்கருவை பொறுத்த வரையில் சமீபத்தில் தமிழ் சினிமா கையாளாத பல சமூகப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளனர்.   தற்காலத்தில் தமிழகம் எதிர்கொள்ளும்  இயற்கை, விவசாயம், குடிதண்ணீர் சார்ந்த விடயங்களை   தொட்டு செல்கிறது கதை .

இயக்குனரின் முதல் படம் என்பதாலோ என்னமோ,  நான்கு சினிமாக்கான கதைகளையும் சம்பவங்களையும் ஒரே திரைப்டத்தில் வலுக்கட்டாயமாக  தினித்து பார்வையாளர்களை மூச்சு திணற வைத்து விட்டார்.

ஒரு பொறியியல் பட்டதாரியான  ஒரு கிராமப்புற இளைஞனின் பிரச்சினை, அவர் வெளிநாடுகளில் சந்திக்கும் வேலையிட பிரச்சினைகள், அவர் இறந்த போது உடலை வைத்து செய்யும் முதலாளிகளின் பித்தலாட்டம் என்ற பார்வையில் எடுத்திருக்கலாம்.  அல்லது கணவரை இழந்த ஒரு இளம் பெண் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து கதையை நகத்தியிருக்கலாம். ஆனால் கதைக்குள் கதையாக,   மனிதர்களும் , கதாபாத்திரங்களும்   திருவிழாக்கூட்டம் போல   நிரம்பி வழிகிறது.

திரை வசனம் பல காட்சிகளில் இட்டுக்கட்டி அரசியல் பேசுகிறது.  சில காட்சிகளில் வார்த்தைகளும் உரையாடல்களும் ஒரு பட்டிமன்றம் போல் நடைபெறுகிறது.   இந்திய காவலதிகாரிகள், வழக்காடு மன்றங்களில் உள்ள நீதிபதிகள், அரசியல்வாதிகள்,  ஏன் பாரத பிரதமரைக் கூட கதாப்பாத்திரமாக கொண்டுவந்து கேலி செய்ய தவறவில்லை இத்திரைப்படம்.

அரிய நாச்சியார் வழக்காடு மன்றத்தில் கத்தி கூப்பாடு போடுகிறார், வீட்டிற்கு வரும் அரசு அதிகாரிகளின் அரசு நகல்களை எறிகிறார், கணவர் இறந்த மனைவியை திருமணம் முடித்துள்ள கொழுந்தனாரை அடிக்கிறார் , உச்ச கட்டமாக கதாநாயகிக்கு ஆதரவாக பேசும் பிரதமர் “மகளே உனக்கு என்ன வேண்டும்” என பணிவாக கேட்கும் போது இந்த அணைக்கட்டை உடைப்பாயா என நாச்சியார் திருப்பி கேட்டுக் கொண்டு நிற்பது இயல்புக்கும் மீறின போராட்டம் போல் புனைகின்றனர்.

ஆட்சியாளராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே கடைசி வரை நல்லவரா கெட்டவரா என்ற முடிவிற்கு வர முடியவில்லை.  ரணசிங்கம் தண்ணீருக்காக போராடும் போதே ஏமாற்றாது தண்ணீர் தருவித்திருந்தால்;  ரணசிங்கம் விவசாயம் செய்து மனைவி, குழந்தைகளுடன் உள்ளூரில் இருந்திருப்பார்.  சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பது மாதிரியே அவர் நடிப்பு நெருடல் தான், இருந்தாலும் நன்றாகவே நடிக்கிறார் பாண்டே.   கடைசி சீனில் கூட  வேறு யார் உடலையோ கொடுத்து ஏமாற்றி கையெழுத்து வாங்கி செல்வார் பாண்டே.  சாதாரண மக்கள் ரணகளத்தில் போராடும் இதே இந்திய நாட்டில்தான் ,  வெளிநாட்டில் இறந்த ஒரு நடிகையின் உடல் 72 மணிநேரத்தில் இந்தியா வந்து சேர்வதையும் காட்டி  இருக்கிறார்கள்.

படத்தின்  மிகப்பெரிய பின்னடைவுக்கு காரணமாக உள்ளது திரைப்பட நீளம்.   ஒரு இடத்தில் கூட பார்ப்பவர்கள் மனtஹில் கதையை பதிய வைக்காது,    நீளமான காதல் , அடிதடி ,  ஒப்பாரி சீன்கள் என நத்தை வேகத்தில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு காட்சிகளை நிறைத்து இருக்கிறார்கள்.  படத்தொகுப்பில் தேவையற்றவற்றை வெட்டி வீசி விட்டு சிறப்பாக செய்திருந்தால் படம் இன்னும் கச்சிதமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும்.  திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால்  திரைப்படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்திருக்கும்.  திரை வசன கர்த்தா சில உரையாடல்களில் தேவைக்கதிகமான ஆவேச உணர்வை வார்த்தைகள் ஊடாக  கொட்டி விட்டுள்ளார்.

கணவர் சட்டை  மற்றும் தாலி குறித்த காட்சிகளை கொண்ட அந்த விடயங்களை கருத்தாக வைத்து கணவரை இழந்த பெண்கள் சார்ந்த கதை கொண்ட  இன்னொரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கலாம்.

சட்டப்படி அணுகும் முறை , மனித உரிமை இயக்கங்களை அணுக வேண்டிய முறை ,  வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான சங்கங்களை வலுவாக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் சொல்லியிருக்கலாம். தரகர்கள் வழியாக வெளிநாட்டிற்கு சட்டப்படி போகும் முறையை பற்றியோ,  வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் துயர் நிலை எதுவும் காட்சியாக ப்திக்கவில்லை இயக்குனர்.

ரணசிங்கம் தண்ணீருக்காக போராடுவார், அரசியல்வாதியாக மாற முயல்வார் , பின்பு அடிதடி இப்படி ஒரு கதாப்பாத்திரத்திற்கு எத்தனை அவதாரங்கள் தான் கொடுப்பார் இயக்குனர்!  இந்தக் குறைகளைத் தவிர்த்து இருந்தால் தமிழ் சினிமாவின் தரமான படமாக, அழுத்தமான உண்மைகளைப் பேசும் படத்தின் ஒன்றாக இது வந்திருக்கும். 

பிரதமரே நேரில்  இருந்து உதவியும், செல்பி எடுத்து வைரலாக்கி ஊடக பார்வையை திருப்பிய பெண் பாதுகாப்பு அமைச்சர் இருந்தும் , ’அண்ணனை மாதிரி’ என்ன உதவி  வேண்டுமென்றாலும் கேளுங்கள் எனக் கேட்டுக்கொண்ட பாசமான ஆட்சியர் இருந்தும், ஒரு    மனைவியால் கணவனின் உண்மையான உடலை  வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வர  முடியவில்லை என்பதை இந்திய அரசு அமைப்பின் தோல்வி என்பதை சொல்லியுள்ளார்கள். ஆனால் அந்த தோல்வி யாரால் என்பதை பற்றி தெளிவில்லை.

ரணசிங்கமாக நடித்துள்ள விஜயசேதுபதிக்கு ஈடு கொடுத்து அரியநாச்சியாக  ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம். விஜய் சேதுபதியின் தங்கையாக பவானிஸ்ரீ இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.  வழக்கமான பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா நடித்துள்ளார்.  ‘பூ’ ராமுவும், வேலராமமூர்த்தியும் குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார்கள். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்பில் மிளிர்கிறார்கள்.

’நாச்சியார்’ என்ற ஜாதிய குறியீட்டை ஜாதீயப்படமாக முத்திரை குத்தாது மன்னித்து விட்டுள்ளார்கள் .   இந்த நவநாகரீக காலத்திலும் வீட்டிற்கு தொலைக்காட்சி, இரண்டு வயது பிள்ளைக்கு தங்க கம்மல் வாங்கும் வீட்டில்;  கல்லூரியில்  படிக்கும் ஒரு பெண்ணுக்கு கைபேசி வாங்கி கொடுப்பதை தவிர்ப்பார்கள்.  பெண்களை காலாகாலம் ஒடுக்கும் உக்தியை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நுட்பமாகவே செய்துள்ளனர்.

சுமார் 100 படங்களில் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த பெரிய கருப்பத்தேவரின் மகனாவார் இயக்குனர் விருமாண்டி  . ஒளிப்பதிவை ஏகாம்பரம் சிறப்பாக  செய்து உள்ளார். ராமநாதபுரத்தின் வறட்சி  வானம் பார்த்த பூமியை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.  ஜிப்ரான் பாடல்கள்  மற்றும்  பின்னணி இசை  சிறப்பு.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் ஜிப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டது. இத்தனை குறைகளையும் மீறி, கதையில்  புதுமை உள்ளதால்  மக்கள் ஆரவாரமாக பார்த்த திரைப்படம் இது.

– ஆலா

Leave A Reply

Your email address will not be published.