பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, அவர்கள் தியாகி அந்தஸ்து வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தும்படி கோரிக்கை விடுத்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு விசாரித்து வரும் நிலையில், இது விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுதாரர் பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.