சிறுபான்மைக் கட்சிகளின் நிலவரம் அறியாமல் சிறீதரன் எம்.பி. எடுக்கின்ற தீர்மானங்கள் தவறு! – ‘சங்கு’ கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் குற்றச்சாட்டு.
“சிறுபான்மைக் கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தீர்மானங்களைத் தனியாகத் தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மைக் கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசமைப்பு சபையில் இருக்கின்றார். ஆகவே, சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் என்பவற்றின் நிலவரங்கள் என்ன என்பதை அறிந்துகொண்டு அவர் அந்த இடங்களில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால், அவரைப் பொறுத்தவரையில் தனியாகத் தானாக சில தீர்மானங்களை நிறைவேற்றுகின்றார்.
அது எதிர்த்தரப்பில் இருக்கக்கூடிய சிறிய கட்சிகளுக்கோ, சிறுபான்மைக் கட்சிகளுக்கோ விரோதமான முடிவுகளாக இருக்கின்றன. அது நாடாளுமன்றத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியது. அவரது கட்சியும் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விலகுமாறு அவரது கட்சி ஆலோசனை கூறியுள்ளது.
அவரது நடவடிக்கை வெறுமனே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மாத்திரமல்ல. அதற்கு முன்னர் வந்த நியமனங்களில் கூட அவர் அவ்வாறு நடந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே அவர் ஏன் அவ்வாறு நடந்துகொள்கின்றார்? ஏற்கனவே அந்தச் சபையில் ஆளும் தரப்பு, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் என 19 பேர் இருக்கிறனர். அதில் சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகளின் உள்ளக் கிடக்கைகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஆளாகத் தான் இவர் இருக்க வேண்டும். அவர் அவ்வாறு கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
ஆகவே, அவரது கட்சியும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றது. நான் நம்புகின்றேன். அவர் ஒரு தமிழ்த் தேசிய இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும், தமிழ்த் தேசிய இனத்துக்கு குரல் கொடுக்கின்றவர் என்ற அடிப்படையிலும் அவர் தான் செய்த நடவடிக்கை சரியா என்பதை அவர்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவரின் கட்சி வழங்கிய ஆலோசனையைக் கேட்பதும் கேட்காததும் அவரின் விருப்பம்.” – என்றார்.
