வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அநீதியானது! – அரசு விசனம்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது அல்ல என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று காலை 8 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.
இதனால் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனினும், சிறார் வைத்தியசாலை, தாய்மார் வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை உட்பட முக்கிய இடங்களில் போராட்டம் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“வைத்தியர்களில் ஒரு பிரிவினர்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது அநீதியான வேலைநிறுத்தப் போராட்டமாகும்.
வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கூட அநீதியானவை.
பேரிடரில் இருந்து மீண்டுவரும் சூழ்நிலையில் அவர்களால் கோரப்படும் கோரிக்கைகள் நியாயமானவை அல்ல.” – என்றார்.
