தமிழரசுக் கட்சியின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்! – துறைநீலாவணையில் சாணக்கியன் எம்.பி. உறுதி.

தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று அவர் நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது முக்கிய அறிவிப்புகளை அவர் விடுத்தார்.

துறைநீலாவணை மீனவர்கள் துறையடிக்குச் செல்லும் வீதியை பிரதேச சபை ஊடாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மீனவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஓய்வுபெறும் மண்டபத்தைப் புனரமைப்பதற்காகப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

துறைநீலாவணை வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை அவர் நேரில் கண்டறிந்தார். இது குறித்து பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருடன் உடனடியாகக் கலந்துரையாடி, குறித்த வசதியை விரைவில் பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார்.

கிராமத்தின் விளையாட்டு மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கள விஜயத்தின் போது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், வட்டார பிரதேச சபை உறுப்பினர் சு.இளமாறன் மற்றும் கிராம மக்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.