டிரம்ப்புடன் முரண்பட்ட தேர்தல் பாதுகாப்பு அதிகாரி பணி நீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுடன் முரண்பட்ட அந்நாட்டு உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவரை டிரம்ப் பதவி நீக்கியுள்ளார்.

வாக்குப் பதிவின் நேர்மை பற்றிய ‘மிகவும் தவறான’ கருத்து காரணமாக இணையப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் க்ரெபக் பதவி நீக்கப்பட்டார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப், பாரிய அளவில் தேர்தல் மோசடி இடம்பெற்றதாக ஆதாரம் இன்றி குற்றம்சாட்டி வருகிறார்.

எனினும் இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகப் பாதுகாப்பானதாக இருந்தது என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தனது தோல்விக்குப் பின் டிரம்பினால் பதவி நீக்கப்படும் இரண்டாவது அதிகாரியாக க்ரெபக் உள்ளார். முன்னதாக பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் விடைபெறும் முன்னர் சி.ஐ.ஏ உளவுப் பிரிவு பணிப்பாளர் ஜினா ஹாஸ்பல் மற்றும் எப்.பி.ஐ பணிப்பாளர் கிறிஸ்டோபர் வ்ரேய் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

ஏனையவர்கள் போன்று டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவின் மூலமே க்ரெபக்கிற்கு தாம் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அதற்கு தாம் வருந்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.