நிவர் புயலின் நிலவரம்: உங்களுக்கான 15 முக்கிய தகவல்கள்

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

நிகர் புயல் குறித்த 10 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

நிவர் புயல் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவிலோ, நவம்பர் 26 அதிகாலை நேரத்திலோ கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதியில், காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்துக்கு இடையே நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ, கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ தூரத்தில், தென்கிழக்கே இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.

இன்று காலை முதல் அந்தப் புயல் வடமேற்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டராக இருக்கும் என்றும், அது 145 கிலோ மீட்டர் வரைகூட செல்லலாம் என்றும் இன்று மதியம் 1 மணியளவில் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலில் மீனவர்களுக்கு உதவுவதற்காகவும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காகவும் கண்காணிப்பு கப்பல்களான சுஜய், ஷெளர்யா, ஷெளனக் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையை கடந்த பிறகு ஏற்படும் பாதிப்பு பகுதிகளுக்கு சென்று மீட்புதவியில் ஈடுபட தயார் நிலையில் 2 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது அதி தீவிர புயலாக உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் உள்ளது என்றும் அர்த்தம்.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் பேரபாயத்தைக் குறிக்கும் 9ஆம் எண் கூண்டு ஏற்றப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 8ஆம் எச்சரிக்கை கூண்டு என்பது துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் துறைமுகப் பகுதியில் வானிலை கடுமையாகும் என்றும் பொருள்.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை மீட்புப்பணிகளுக்காக விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்தியாவாசிய பணிகள் தொடர்ந்து இயங்கும். 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புயல் கரையை கடந்ததும் கண்காணிப்பு, சேத மதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணிகளுக்கு உதவ 3 டோர்னியர் ரக விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவுவதற்காக 23 பேரிடர் நிவாரண குழுக்களும் தயாராக உள்ளன.

தற்போதைய நிலையில், வங்காள விரிகுடா பகுதியில் 2,461 மீன்பிடி படகுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள படகுகள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்களில் உள்ள கப்பல்கள் பாதுகாப்பான வகையில் நங்கூரமிட்டு இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் இன்று திறக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மாலை 6 மணியளவில் 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.