கொரோனாத் தொற்றுப் பரவல் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

கொரோனாத் தொற்றுப் பரவல் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இம்மாத இறுதிக்குள் கட்டுப்பாட்டுக்குள்
இராணுவத் தளபதி திட்டவட்டம்

கொரோனா வைரஸின் தற்போதைய நிலையில் மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படாது என்று கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என்றும், தனிமைப்படுத்தல் குறித்து மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள இராணுவத் தளபதி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதே எப்போதும் சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

நத்தார் பண்டிகைக்குச் சில வாரங்களே உள்ள நிலையில் இது தொடர்பாக அடுத்த வாரமளவில் ஆராயப்படவுள்ளது என்றும், மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அதன்போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டா ர்.

மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கு அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்றும், முழு பொலிஸ் பகுதிகளையும் முழுமையாக முடக்குவதை விட, அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் எனச் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.