பேலியகொட மீன் சந்தையை திறப்பது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்பு.

•மெனிங் சந்தை மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவை மூடப்படுகின்றமை விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

•மெனிங் சந்தையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்….

•சுகாதார பரிந்துரைகளுக்கமைய பேலியகொட மீன் சந்தையை திறப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்….

•பேலியகொட மீன் சந்தை 10 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்படுகின்றது.

-பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ

சுகாதாரத்துறையினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கடைப்பிடித்து பேலியகொட மீன் சந்தையை திறப்பது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (2020.12.08) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது பிரதானமாக மீன் சந்தையின் வெளியேறும் வாயில் மற்றும் சாலையை புனரமைக்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறும், சந்தை வளாகத்தில் பறவைகளினால் ஏற்படும் மாசை தடுப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தினார்.

பேலியகொட நகர சபையில் போதிய பொது சுகாதார பரிசோதகர்கள் இல்லாவிடின், ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர்களை இணைத்துக் கொண்டு மீன் சந்தையின் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செயற்படுத்துவதையும், கண்காணிப்பையும் மேலும் வலுப்படுத்துமாறும் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

பேலியகொட மீன் சந்தையானது 10 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் மெனிங் சந்தையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள், விற்பனை நிலையங்களை விநியோகிப்பதில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கருத்து கோரப்பட்டது. மெனிங் சந்தையில் பழைய விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு புதிய விற்பனை நிலையங்கள் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் புதிதாக எவருக்கும் விற்பனை நிலையங்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் இதன்போது அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டில் பெரும்பாலானோரது வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையாகும். இதனால் பேலியகொட மீன சந்தை மற்றும் மெனிங் சந்தை ஆகியவற்றை மூடுவது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி வாழ்வாதாரத்திற்கும் நேரடியாக தாக்கம் செலுத்தும் என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சரவை அமைச்சர்கள், கௌரவ இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.