முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்.

முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சூழலியல் கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

2016ஆம் ஆண்டில் 16 சதவீதமாகக் காணப்பட்ட அடர்ந்த காடுகள், 2030ஆம் ஆண்டளவில் 10 சதவீதம் வரை குறைவடையும் அபாயம் உள்ளது எனவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலைபேறான திட்டங்கள் இன்றி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளால் முத்துராஜவெல போன்ற இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும், குறித்த பிரதேசங்களில் சூழலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் காடழிப்புகளால் 103 ஆறுகளும், அதிகமான குளங்களும் வற்றிப் போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் வளங்களை அடுத்த சந்ததியினருக்கும் வழங்கக் கூடிய வகையில், நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் சூழலியல் கற்கைகள் நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.