சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் விமர்சனம்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கபடதாரி படத்தின் விமர்சனம்.

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவர் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட பகுதியில் மெட்ரோ பாலத்துக்கு அடியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. தன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இது நடந்திருப்பதால் கிரைம் பிரிவு ஆய்வாளரிடம் தன்னையும் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ள கேட்கிறார். ஆய்வாளர் மறுக்க, தன்னுடைய ஆர்வத்தில் ரிஸ்க் எடுத்து கொலை பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறார்.

இந்த கேஸ் விஷயத்தில் குழப்பம் அடையும் சிபிராஜுக்கு ஒரு கட்டத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் இறந்த 3 பேர் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மையை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் கம்பீரமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கிரைம் வழக்கு மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவது என கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆனால், இவரது நடிப்பில் ஏதோ ஒன்று குறைவது போல் படம் முழுக்க தோன்றுகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு டூயட், காதல் காட்சிகள் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு கதாநாயகனாக வருகிறார் நாசர். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல் ஜெயப்பிரகாஷின் நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. வில்லனாக சம்பத் மைத்ரேயா நடித்துள்ளார். இவரது நடிப்பும் படத்துடன் ஒட்டாதது போல் இருக்கிறது. நடிகை ரம்யாவாக வரும் சுமன் ரங்கநாதன், சாய் தீனா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.