திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை தற்போதே திமுக, அதிமுக கட்சிகள் சுறுசுறுப்பாக தொடங்கியுள்ள நிலையில் மண்ணச்சநல்லூர் மற்றும் மணப்பாறை தொகுதிக்கான வேட்பாளர்கள் யார் யார் என்கிற யூகம் தான் தற்போது திருச்சி மாவட்ட அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மண்ணச்சநல்லூர் தொகுதி திருச்சியில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியை அதிமுகவினர் ராசியான தொகுதி என்று கூறுகிறார்கள். மண்ணச்சநல்லூரில் அதிமுக வென்றால் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கைப்பற்றுவது வழக்கம் என்கிறார்கள். இதனால் இந்த தொகுதிக்கு வேட்பாளர் தேர்வில் அதிமுக மிகுந்த கவனத்துடன் இருக்கும் என்கிறார்கள். ஆனால் ஒன்றியச் செயலாளரிடம் கன்னத்தில் அறை வாங்கியது, ஒப்பந்ததாரரிடம் 30 சதவீதம் கமிசன் கேட்ட ஆடியோ சிக்கியது, மண்ணச்சல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது, புறம்போக்கு நிலத்தை கணவர் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது என சிட்டிங் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி மீது புகார்கள் ஏராளம்.

எனவே இந்த முறை பரமேஸ்வரிக்கு மண்ணச்சநல்லூரில் வாய்ப்பு இல்லை. அத்தோடு பரமேஸ்வரிக்கு சீட் வாங்கிக் கொடுக்க மாவட்டச் செயலாளர் பரஞ்சோதியும் தயாராக இல்லை. அதே சமயம் இந்த தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்தவருக்கு மண்ணச்சநல்லூரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்களில் முன்னணியில் இருப்பவர் மாநில எம்ஜிஆர் அணி இணைச் செயலாளராகவ உள்ள பொன்.செல்வராஜ். இவர் தான் மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளருக்கான ரேஸில் முன்னணியில் உள்ளார்.

 

மாவட்டச் செயலாளர் பரஞ்சோதிக்கு வலதுகரமாக செயல்பட்டு வருபவர், ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரிடமும் விசுவாசம் காட்டுபவர் பொன்.செல்வராஜ் என்கிறார்கள். மேலும் அம்மன் கல்விக்குழும தலைவர் என்பதால் திருச்சி மாவட்டம் முழுவதுமே அறியப்பட்ட நபராக உள்ளார். அதிமுகவினர் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர் உள்ளது. முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர், செலவை பற்றி கவலைப்படாதவர், கட்சி எதிர்பார்க்கும் தொகையை தாண்டி செலவு செய்யும் ஆற்றல் கொண்டவர் என செல்வராஜ் குறித்து அதிமுகவினரே பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அதவத்தூர் ஊராட்சியில் தேர்தல் பொறுப்பாளராக இருந்து அந்த கிராமத்தில் உள்ள 100 சதவீத வாக்குகளையும் இரட்டை இலைக்கு பெற்றுக் கொடுத்து ஜெயலலிதா கைகளால் பரிசு பெற்றவர். சர்ச்சைகளில் சிக்காதவர், செயல் வீரர், தேர்தல் பணிகளின் சூட்சமம் என்பதால் மண்ணச்சநல்லூர் வேட்பாளராகும் வாய்ப்பு பொன்.செல்வராஜுக்கு அதிகம் என்கிறார்கள். பொன் செல்வராஜ் தவிர, முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேலு, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன் ஆகியோரும் அதிமுகவின் வேட்பாளருக்கான ரேஸில் உள்ளனர.

இதே போல் மணப்பாறை தொகுதியையும் அதிமுக எப்போதுமே முக்கியமானதாக கருதும். இத் தொகுதியின் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சந்திரசேகர் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறார். எனவே இந்த தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் ரேஸில் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளருமான சின்னச்சாமி முன்னிலையில் உள்ளார். உள்ளூர்காரர் என்பதால் மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதே தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனும் சீட் கேட்கிறார். ஆனால் வயது 70ஐ கடந்துவிட்டது. கட்சியை விட்டு வெளியே சென்று புதிய கட்சி ஆரம்பித்தது, தேமுதிகவில் சேர்ந்தது போன்ற நடவடிக்கைகளால் கு.ப.கிருஷ்ணன் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.

எனவே ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர், கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர், ஊராளிக் கவுண்டர் ஜாதி பலம் என்கிற அடிப்படையில் சின்னச்சாமி மணப்பாறை தொகுதியின் அதிமுக வேட்பாளராக வாய்ப்பு அதிகம். அதே சமயம் தனது மருமகன் ஐஏஎஸ் அதிகாரி என்பதாலும் கோட்டையில் செல்வாக்கு செலுத்துபவர் என்பதாலும் அவர் மூலமாக மணப்பாறையை மறுபடியும் பிடித்து அமைச்சராகும் கனவில் கு.ப.கிருஷ்ணன் உள்ளார். இப்படி இந்த இரண்டு தொகுதிகள் மட்டும் அல்லாமல் திருச்சியின் மற்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளராக கடும் போட்டி நிலவுகிறது.