முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம். ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் யாழ்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக மாகாண கல்வித்திணைக்களத்தால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு இன்று அவர் கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் இன்றைய தினம் காலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் எமது பாடசாலையில் ஏற்கனவே அதிபராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் பாடசாலையில் பல்வேறு முறைகேடான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

எனவே குறித்த அதிபரை மீண்டும் எமது பாடசாலைக்கு நியமித்து பாடசாலையின் அபிவிருத்தியில் வீழ்சியை ஏற்படுத்த வேண்டாம். எனவே இவருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறு தெரிவித்ததுடன்,

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார். எமது பாடசாலை பணிஸ்மன்ட் இடமாற்றத்திற்கான புகலிடமா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலையின் பிரதான வாயிலை மூடி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பொலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையிலும் அவர்கள் தமது கோரிக்கையில் உறுதியாக நின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தெற்கு வலயக்கல்விபணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் இது தொடர்பாக கலந்துரையாடி ஒரு தீர்விற்கு வரலாம் என தெரிவித்ததுடன், பாடசாலை வாயிலை திறக்குமாறும் கோரியிருந்தார். பின்னர் பாடசாலை வாயில் திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடாத்திய பெற்றோருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் பிரகாரம் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டநிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கல்விசெயற்பாடுகள் வழமைக்கு திரும்பியது.

இதன்பின்னர் கருத்துத் தெரிவித்த வலயக்கல்வி பணிப்பாளர், கிராம மக்கள் மற்றும் பெற்றோர்களது கோரிக்கைக்கமைய குறித்த அதிபருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை இப்பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக அவர்களிற்கு தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒஸ்மானியா கல்லூரியில் கடமையாற்றிய தமிழ்த்துறை ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டமைக்கு இவரே காரணம் என பிரதிக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பகிரங்கமாக தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.