கோட்டக்கல்வி அதிகாரிகள் வெற்றிடங்களை நிரப்புக; கல்வி அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.ஏல்.முகம்மட் முக்தார் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாணத்தில் கல்முனை, கிண்ணியா, மட்டக்களப்பு மத்தி, மூதூர் மற்றும் திருமலை ஆகிய கல்வி வலயங்களில் மிக நீண்ட காலமாக கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாது காணப்படுகின்றன.

இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கோரிய போதும் இதுவரை நேர்முக பரீட்சை நடாத்தப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நாவிதன்வெளி, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை, ஓட்டமாவடி, தோப்பூர், குச்சவெளி ஆகிய கோட்டங்களுக்கே இவ்வாறு நீண்ட காலமாக கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கை கல்வி நிருவாக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய கோட்டக் கல்வி அதிகாரி பதவி இலங்கை கல்வி நிருவாக சேவையின் பொது ஆளணிக்குரிய பதவியாகும். கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் இலங்கை அதிபர் சேவை முதலாம் தர சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் கல்வி கோட்டமொன்றில் ஒரு சாதாரண ஆசிரியர் கோட்டக் கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு அதிபர், ஆசிரியர்களை மேற்பார்வை செய்துவரும் அவலமும் இடம்பெறுகிறது.

சில கல்வி வலயங்களில் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் பதில் கடமை அடிப்படையில் தமது வழமையான கடமைகளுக்கு மேலதிகமாக செய்து வருகின்றனர். இது பல்வேறு நிருவாக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வெற்றிடமாக காணப்படுகின்ற கோட்டக் கல்வி அதிகாரி பதவிகளை உடனடியாக நிரப்புமாறு சங்கச் செயலாளர் முகம்மட் முக்தார் அக்கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.