கண்ணாமூச்சி ஆட்டத்தால் , பஞ்சத்தில் மடியும் யேமன்… சண் தவராஜா

அண்மைக் கால உலக வரலாற்றில் பஞ்சம் என்றதும் பொதுவாக ஞாபகத்திற்கு வருவது சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள். இரண்டாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில், உள்நாட்டு யுத்தம் காரணமாக உருவான பஞ்சம் இந்த இரண்டு நாடுகளிலும் ஏற்படுத்திய மனித அழிவு எண்ணிக்கையில் அடங்கா. நவீன உலகின் கண் முன்னே யுத்தம் ஏற்படுத்திய இந்தப் பஞ்சங்கள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவையே. ஆயினும், பூகோள அரசியல் காரணங்களால் அவை கண்டு கொள்ளப்படவில்லை. உலக சமூகத்தால் தடுக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட அத்தகைய ஒரு பஞ்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது மத்திய கிழக்கு நாடான யேமன். 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 80 வீதமானோர் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது. 28.5 மில்லியன் மக்கட் தொகையைக் கொண்ட நாட்டில் 24 மில்லியன் மக்கள் இவ்வாறு உதவி வேண்டும் நிலையில் உள்ளனர். இவர்களுள் 12 மில்லியன் சிறார்கள் அடங்குவர்.

யேமன் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக 2016 ஆம் ஆண்டு முதலே அந்த நாட்டில் பஞ்சம் ஆரம்பித்துவிட்டதாக ஐ.நா. செய்திகள் கூறுகின்றன. 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் பஞ்சத்தின் விளைவாக ஐந்து வயதிற்கும் குறைவான 85,000 சிறார்கள் மரணத்தைத் தழுவியுள்ளனர். இவ்வாறு 2017 ஆம் ஆண்டில் சுமார் 50,000 சிறார்கள் பஞ்சம் மற்றும் போசாக்கின்மை காரணமாக மரணத்தைத் தழுவியுள்ளனர்.

2020 மே மாதம் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் ‘யேமன் நிலைமை உலகின் மிக மோசமான மனிதாபிமானச் சிக்கலை’ நோக்கிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அன்றைய நிலையில் சுமார் 2 மில்லியன் சிறார்கள் பஞ்சம் மற்றும் போசாக்கின்மை நிலை காரணமாக இறக்கும் அபாயத்தில் உள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நிலவும் பட்டினி அபாயத்தை வைத்து ஆண்டு தோறும் எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய ஆபிரிக்கக் குடியரசுக்கு அடுத்த இடத்தில், இரண்டாவது நிலையில் யேமன் உள்ளது.

யுத்தத்தைக் காரணம் காட்டி யேமன் நாட்டு மக்களுக்கான உதவிகள் சென்றடைவது திட்டமிடப்பட்ட அடிப்படையில் தடுக்கப்படுகின்றது. எலும்பும், தோலுமாக, ஒட்டிய வயிறுகளுடன் காட்சி தரும் சிறார்களின் படங்கள் பன்னாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகி மனிதாபிமானம் கொண்ட மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற அதேவேளை, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்படும் போக்கும் நீடித்து வருகின்றது.

2020 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் பிரகாரம் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சம் சிறார்கள் உடனடியாகப் பராமரிக்கப்படாது விட்டால் வெகு விரைவில் மரணத்தைத் தழுவலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பிள்ளைகளின் நிலையைப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக் காட்டு போதுமானது. 4 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் எடை வெறும் 6 கிலோ மாத்திரமே என்பதன் மூலம் வறுமையின் கோரத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

யேமன் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள துயரங்களுக்குக் காரணம் அந்த மண்ணில் நிகழ்ந்து வரும் கொடிய யுத்தமே. இந்த யுத்தத்தை நிறுத்தக் கூடிய வல்லமை தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு மாத்திரமே உள்ளது. அமெரிக்கா ஒரு வார்த்தை சொன்னால், அதைக் கேட்டு நடக்கக் கூடிய நாடான சவூதி அரேபியா தனது படை நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, வான்வெளி மற்றும் கடல் முற்றுகைகளைக் கைவிட்டால் அடுத்து ஓரிரு நாட்களில் யேமன் மக்களின் துயரம் தற்காலிகமாகவேனும் முடிவிற்கு வந்துவிடும். ஆனால், அமெரிக்கா அதனைச் செய்யாது என்பது தெளிவு.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரிய நேச நாடான சவூதி அரேபியாவின் எல்லையில் அமைந்துள்ள யேமன் நாட்டில் ‘ஈரான் நாட்டின் செல்வாக்கு’ அதிகரிப்பதை அமெரிக்கா எவ்வாறு அனுமதிக்கும்?

ஈரானின் செல்வாக்கைக் குறைக்கும் அல்லது இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் எத்தனை உயிர்கள் பலியானாலும் அதைப் பற்றிய கவலை அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் இல்லை.

2019 ஓகஸ்ற் 3 ஆம் திகதி ஐ.நா. சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று “மக்களைப் பட்டினியில் ஆழ்த்தும் தந்திரோபாயத்தை ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர்க் குற்றங்களுக்குத் துணை போகின்றன” எனக் குற்றஞ் சாட்டியிருந்தது.

இந்தப் பட்டியலில் யேர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்த நாடுகளும் சவூதி அரேபியாவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகின்றன.

மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பது, அத்தகைய நிலைமையை உருவாக்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திருப்பிவிடுவது போன்ற உத்திகள் பழையனவே ஆனாலும், உலகளாவிய மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானவையே ஆனாலும் அத்தகைய செயற்பாடுகள் உலகின் அனைத்து நாடுகளிலும், பிராந்தியங்களிலும், தேசங்களிலும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். தொடர்ந்தும் கண்டு கொண்டிருக்கிறோம்.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தை அகற்றிவிட்டு, பதிலாக ஜோ பைடனின் ஆட்சியை வரவேற்று ஆதரித்த பலரும் ‘புதிய ஆட்சியில் அமெரிக்கா இணக்கப் போக்கைக் கைக்கொள்ளும்’ என்று பரப்புரை செய்திருந்ததை அறிவோம். ட்ரம்ப் அவர்களின் பதவியின் இறுதிக் காலத்தில் கூட, யேமன் நாட்டில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் தொண்டு நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்திருந்தார்.

இதனால், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பெருமளவில் தடைப்பட்டது மட்டுமன்றி, மிகச் சொற்ப அளவிலேயே மக்களுக்குக் கிடைத்து வந்த மருத்துவ உதவிகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன.

பைடன் ஆட்சிக் காலத்தில் யேமன் நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மார்ச் 2 ஆம் திகதி வெளியான தகவல்களின் படி, ஈரானிய ஆதரவு ஹவுத்தி பிரிவு இராணுவ அதிகாரிகள் இருவர் மீது பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹவுத்தி கடற் படையின் பிரதான அதிகாரி மன்சுர் அல்-சாதி, விமானப் படைத் தளபதி அஹமட் அலி ஆசான் அல் ஹம்சி ஆகியோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் கண்முன்னே மனதாபிமானத்துக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் அதனைத் தடுப்பதற்கு வல்லமையற்ற நிலையிலா உலகம் உள்ளது என்ற கேள்வி எழுகின்றது. ‘போர் புரிகின்றவர்கள் இஸ்லாமியர்கள், போரில் பலியாகின்றவர்களும் இஸ்லாமியர்கள். இதில் நமக்கென்ன நட்டம்?’ என நினைப்போர் ஒருபுறம். ‘ஈரானின் விஸ்தரிப்பு வாதத்தைத் தடுப்பது நல்லதுதானே? அதன் மூலம் இஸ்லாமியப் பயங்கரவாதம் பரவுவதைத் தடுக்க முடியும்தானே?’ என அங்கலாய்ப்போர் மறுபுறம். ‘கொரோனக் கொள்ளைநோய் காரணமாக நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில், இதில் எங்குபோய் நாங்கள் யேமன் மக்களைக் காப்பது?’ எனக் கேட்போர் ஒருபுறம். ‘உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் பிரச்சனைக்கு நாங்கள் என்ன செய்வது? எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்தானே?’ என நினைக்கும் சுயநலவாதிகள் ஒருபுறம் என உலகம் யேமன் மக்களை மறந்த நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே யேமன் நாட்டிற்கு நிதியுதவி வழங்கும் நோக்கிலான மெய் நிகர் மகாநாடு மார்ச் முதலாம் திகதி நடைபெற்றது. ஐ.நா. சபையின் முன்மொழிவுடன் சுவிடன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைமையில் இந்த மகாநாடு நடைபெற்றது. சுமார் 100 அரசாங்கங்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து, நடப்பாண்டுக்காக 3.85 பில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 1.7 பில்லியன் டொலர் மட்டுமே இந்த மாநாடு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த வருடம் கிடைத்த தொகையை விடவும் குறைவானதாகும். அது மாத்திரமன்றி 2019 இல் கிடைத்த தொகையை விடவும் ஒரு பில்லியன் டொலர் குறைவானதாகும்.

தற்போது உறுதியளிக்கப்பட்டுள்ள நிதியில் அதிக தொகையை சவூதி அரேபியா வழங்க முன்வந்துள்ளது. அது 430 மில்லியன் டொலர் ஆகும். இரண்டாவது பெரிய தொகையை வழங்கியுள்ள நாடு யேர்மனி. இந்த நாடு தனித்து 241 மில்லியனை வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 230 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.  அமெரிக்கா 191 மில்லியனை வழங்கியுள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 35 மில்லியன் டொலர் குறைவானதாகும்.

கொரோனாக் கொள்ளைநோய் காலத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை ஒரு காரணமாகக் கொண்டாலும், அதனையும் தவிர்த்து யேமனில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஹவுத்திகளைச் சென்றடைகின்றது. மனிதாபிமான உதவி வழங்கலில் மோசடிகள், ஊழல்கள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்பாத்த நிதி கிடைக்காமையால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் குற்றறஸ், ‘நிதியைக் குறைப்பது என்பது யேமன் மக்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய நிலையில் யேமன் மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பதற்கான ஒரே வழி, நாடு முழுமைக்கும் போரை நிறுத்துவது ஒன்றே” என்பது அவரது கருத்து. ஆனால், இந்தக் கருத்து வழமை போன்றே ~செவிடன் காதில் ஊதிய சங்காய்| கண்டு கொள்ளாமல் விடப்படும் அபாயமே உள்ளது.

2014 இல் யேமனில் உள்நாட்டுப் போர் தொடங்கிய நாள்முதலாக இன்றுவரை சுமார் 1,30,000 வரையான மக்கள் இறந்துள்ளனர். யேமன் நாட்டு சுகாதாரக் கட்டுமானங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டு விட்டன. 4 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டில் அகதிகளாக மாறியுள்ளனர். கொரோனக் கொள்ளைநோய், வாந்திபேதி, போசணைக் குறைபாடு ஆகியவை மக்களைத் தினமும் கொன்றொழித்து வருகின்றன. ஐ.நா. அறிக்கைகளின் பிரகாரம் 16 மல்லியன் மக்கள் இந்த வருடத்தில் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களுள் அரைவாசிப் பேர் ஒரு வாய் உணவு கூடக் கிட்டாத நிலைக்கு ஆளாகுவார்கள் என எச்சரிக்கின்றது அந்த அறிக்கை.

யேமன் நாட்டுக்கு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்ட நோர்வே அகதிகள் பேரவை நிறுவன செயலாளர் நாயகம் யான் இங்கிலன்ட் அவர்களின் வார்த்தைகள் யேமனின் இன்றைய நிலையை விளக்கப் போதுமானவை. போதிய நிதியுதவி கிடைக்காதமை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், “மனிதாபிமான உதவிக் குறைப்பு என்பது உயிர் இழப்புகளிலேயே கணக்கிடப்படும்” என்கிறார். யேமன் மக்களின் எதிர்காலத்தை இதைவிட வேறு வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது.

Leave A Reply

Your email address will not be published.