‘மேட் இன் ஸ்ரீலங்கா’ உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம்.

‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைகோர்ப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு முறைமை (Standard Operating Procedures) வெளியீடு கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் (15) இடம்பெற்றபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவினால் குறித்த நிலையான செயற்பாட்டு முறைமையை உள்ளடக்கிய ஆவணம் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு வெளியிடப்பட்ட இலங்கை வாகன மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் தொழிற்துறைக்கான நிலையான செயற்பாட்டு முறைமையினை கைத்தொழில்துறை அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், “நீண்ட காலமாக எமது நாட்டின் தேவையாக காணப்பட்ட துறையொன்றுக்கு இன்று ஆரம்பம் கிடைத்துள்ளது. அது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆண்டுதோறும் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை செலவிட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். அத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்ய நாங்கள் ஆண்டுதோறும் 1000, -1500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டோம்.

எனவே கொவிட் உடன் வந்த பொருளாதார தாக்கத்தை குறைக்க வாகன இறக்குமதியை நிறுத்தினோம். எவரையும் துன்புறுத்தும் நோக்கத்துடன் இதனை செய்யவில்லை.அந்நேரத்திலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டில் காணப்பட்டன.

குறிப்பாக உலகளாவிய தொற்றுநோய் ஏற்பட்ட இத்தருணத்திலேயே உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் நன்கு புரிந்துள்ளது. அதுமாத்திரமன்றி, நமது பொருளாதார அமைப்பின் குறைபாடுகளை ஈடுசெய்யவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஒரு அமைப்பை மாற்ற முயற்சிக்கும்போது, பல்வேறு தடைகள் வரும். சிலர் அதை விரும்புகிறார்கள். சிலர் அதை விரும்பவில்லை. ஆனால் நாங்கள் ஒரு வெற்றிகரமான அமைப்பை அறிமுகப்படுத்தும்போது, அனைவரும் அத்திட்டத்தில் இணைகிறார்கள்.

வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையொன்று இதற்கு முன்னர் காணப்படவில்லை.இத்தகைய அமைப்புகளை உருவாக்க பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை செயல்படுத்த எவரும் முன்வரவில்லை.

எனக்கு தெரியும் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் இது குறித்து நிறைய விவாதங்களை நடத்தினார். அவர் அமைச்சரவைக்கு வந்து அது குறித்து எங்களுக்கு விளக்கினார்.

ஆனால் இந்த வேலையை இவ்வளவு விரைவாக செய்ய முடியும் என்று நாங்கள் யாரும் நம்பவில்லை.இது நம் நாட்டின் கைத்தொழில்துறையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.நாட்டில் ஒரு நிலையான செயற்பாட்டு முறைமை இருக்கும்போது, எந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது வசதியானதாக அமையும்.

அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி நம் நாட்டில் வாகனத் தொழிற்துறைக்குள் நுழைவதற்கு இது வழிவகுக்கும்.உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பொருட்கள், மின்னணு உற்பத்திகள், டயர்கள் மற்றும் இரப்பர் கைத்தொழில்களும் இந்த வசதி ஊடாக மேம்படுத்தப்படும்.

மறுபுறம், நாட்டில் புதுமைகளுக்கு பெரும் தேவையை உருவாக்குவதற்கும், அதில் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் இதுபோன்ற தரமான செயற்பாட்டு முறைமை இருப்பது முக்கியமாகும்.

அதேபோன்று கைத்தொழில்துறையில் தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட சுமார் 20,000 நிபுணர்களுக்கு இந்த திட்டம் நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும். நாம் ஒரு மேம்பட்ட உலகத்துடன் போட்டியிடுகிறோம். எங்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும், இந்த போட்டியில் இருந்து நாம் விலகக்கூடாது. அந்நிய செலாவணியின் வெளிப்பாய்ச்சலை குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதார சவாலை சமாளிக்கும் ஆற்றல் எமக்குள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.