தமிழர் நம்பிக்கை இழக்கவேகூடாது! தந்தை செல்வா நினைவுப் பேருரையில் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிப்பு.

“இலங்கையில் சமாதான சூழலுக்குப் பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது.”

இவ்வாறு இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைத்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவுநாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ‘முன்னேற்றத்தின் வழிகளில் இணக்கம் காணுதல்’ எனும் தலைப்பில் கலாநிதி ஜெஹான் பெரேரா நினைவுப் பேருரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நாம் தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டியுள்ளது.

13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை ஏற்படுத்தப்பட்டாலும், அது முழுமை பெறாத நிலைமை தொடர்கின்றது. அதன் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

தற்போதைய அரசு அதிகாரப் பரவலாக்கல் முறைமைகளை முற்றாக அகற்றுவதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற தப்பான சிந்தனையோடு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளனர்.

பௌத்த மதத்தையும் இந்தத் தீவையும் பாதுகாக்கும் பொறுப்பு தம்மிடம் வழங்கப்பட்டுள்ளது என நம்பும் சிங்கள மக்கள், சிறுபான்மையினரின் மனநிலையுடன் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் வேறு பிரதேசங்களில், வித்தியாசமாக கலாசார, மொழி பின்னணியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இந்தத் தீவில் எப்படியான நிர்வாகத்தைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 18 மாத காலத்துக்கு இலங்கை மீதான கண்காணிப்பு கடுமையாக இருக்கும்.

ஐ.நா. தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் என்ற விடயம் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஜானம், யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.