இந்தியாவும் கட்டாரும் அனுமதி மறுத்ததால் கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்த கப்பல்

கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (முத்து)வில் இருந்த அனைத்து கொள்கலன்களும் தீயில் கருகிவிட்டன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு 20 ஆம் திகதி தீப்பிடித்தது.

25 ஆம் திகதி கப்பல் வெடிக்க ஆரம்பித்து பல கொள்கலன்கள் கடலில் விழ ஆரம்பித்தன.

பின்னர், தீ வேகமாக பரவியதால், அவ்வப்போது அதிகமான கொள்கலன்கள் தொடர்ந்து கடலில் விழுந்தன.

186 மீட்டர் நீளமும் 34 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் தீயில் மூழ்கியது.

இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகே எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட ரசாயன கசிவு முதன்முதலில் இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரேபிய கடலில் வைத்தே கண்டறியப்பட்டதாக ஒரு கடற்படை செய்தி சேவை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்குவதற்கு முன்பு இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு துறைமுகங்களுக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டு துறைமுகங்களுக்குள்ளும் கப்பல் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கப்பலை வைத்திருக்கும் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டிம் ஹார்ட்னோல் ஒரு வலைத்தளத்தை மேற்கோள் காட்டி, கப்பல் தீப்பிடித்ததற்கு காரணம் அது கொண்டு செல்லும் ரசாயனங்கள் கசிந்ததுதான் எனத் தெரிவித்துள்ளார்.

25 டன் நைட்ரிக் அமிலத்தின் பல கொள்கலன்கள் உட்பட 1,486 கொள்கலன்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றது.

ரசாயனம் அடங்கிய கொள்கலன்கள் முறையாக அடைக்கப்படாததால் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த நேரத்தில், கப்பலின் கேப்டன் இந்தியாவின் ஹசிரா மற்றும் கத்தார் ஹமாத் ஆகிய துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தார்.

இருப்பினும், அந்த துறைமுகங்களுக்கு செல்ல அனுமதி கிடைக்காததால், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரண்டு துறைமுகங்களில் ஏதேனும் ஒன்றில் கசிவு ஏற்பட்ட கொள்கலன்கள் இறக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தினை தவிர்த்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக கப்பலை சொந்தமாகக் கொண்ட நிறுவனம் இப்போது ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை பரிசோதனை செய்வதற்காக நெதர்லாந்தைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.