தடுப்பூசிக் கொள்கையில் மாற்றம் வந்தது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 7ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் உரை என்றாலே பீதியடையும் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் அச்ச உணர்வுகளைப் பரிகாசங்களாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொரோனா தடுப்பைப் பற்றித்தான் பேசுவார் என்ற பொதுவாக அனுமானத்திற்கு ஏற்பவே பிரதமரின் பேச்சு அமைந்திருந்தது. குறிப்பாகத் தடுப்பூசிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பிரதமர் பேசினார்.

மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என அவர் கூறினார்.

முகக் கவசம், ஆக்சிஜன், ரேஷன் பொருட்கள் எனப் பலவற்றையும் தொட்டு அவர் பேசினாலும் தடுப்பூசிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியமானது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்கத் தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது” என்று சொன்ன பிரதமர், தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்துவிட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன என்றார்.

இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும். ஜூன் 21ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இது அமலில் இருக்கும் என்று அறிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி செலுத்தப்படும். எனினும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விரும்பினால் அதற்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய மாற்றங்கள்

மையப்படுத்தப்பட்ட கொள்முதல், இலவசத் தடுப்பூசி ஆகியவை தடுப்பூசிக் கொள்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள். இந்த மாற்றங்களைப் பரவலாகப் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், இந்த
மாற்றம் தானாக வந்துவிடவில்லை. மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு காதுகொடுத்துக் கேட்டதால் வந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தடுப்பூசிக் கொள்கைகளைப் பற்றிக் கடுமையான கருத்துக்களை முன்வைத்த பிறகே இந்த மாற்றம் வந்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த பல்வேறு பிரச்சினைகளை உச்ச நீதிமன்ற அமர்வொன்று விசாரித்துவருகிறது. டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான இந்த அமர்வில் எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

தடுப்பூசிக் கொள்கை பற்றிப் பல கேள்விகளை இந்த அமர்வு எழுப்பியிருந்தது. அரசியல் சட்டப் பிரிவு 21இன் கீழ் உயிர் வாழ்வதற்கான உரிமை, பிரிவு 14இன் கீழ் சமத்துவத்திற்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உரிமைகளுக்கான சட்டகத்திற்கு உட்பட்டதாகவும் அதற்கு நியாயம் செய்வதாகவும் அரசின் கொள்கை இருக்க வேண்டும் என்று அது கூறியது.

சுகாதாரம், சமத்துவம் ஆகியவற்றுக்கான உரிமைகளை அடியொற்றியதாக இருக்கும் வகையில் தற்போதைய தடுப்பூசிக் கொள்கையை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அது கூறியது.

முந்தைய கொள்கையில் என்ன பிரச்சினை?

பிப்ரவரி 28 முதல் நடப்பிலிருக்கும் தடுப்பு மருந்துக் கொள்கையின்படி, மையப்படுத்தப்பட்ட விதத்தில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். அரசு, தனியார் அமைப்புகள் மூலம் மக்களுக்கு அவை போய்ச் சேருவதற்கான ஏற்பாட்டை மாநிலங்கள், செய்ய வேண்டும். பொது அமைப்புகளில் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படும். தனியார் அமைப்புகளில் ஒரு டோஸுக்கு ரூ. 250 கட்டணம். சுகாதாரப் பணி ஊழியர்களும் சுகாதாரப் பணியில் ஈடுபடும் இதர சில வகையினரும் தடுப்பூசி பெறத் தக்கவர்கள் என வரையறுக்கப்பட்டார்கள்.

ஏப்ரல் 1 அன்று 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அதில் சேர்க்கப்பட்டார்கள். 18-44 வயதினரும் பிறகு இணைக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.

மே 1 முதல் நடைமுறைக்கு வந்த மாற்றியமைக்கப்பட்ட கொள்கை மத்திய அரசு மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 50 விழுக்காட்டினை மட்டுமே கொள்முதல் செய்யும் என்று வரையறுத்தது. மீதியுள்ள 50 விழுக்காட்டைப் பெற மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம். 45 வயதிற்கு உட்பட்டவர்கள் உற்பத்தியாளர்களும் தனியார் மருத்துவமனைகளும் நிர்ணயித்த விலையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் அதே முறையில் தனியாரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
நீதிமன்றத்தின் கேள்விகள்

இந்தக் கொள்கையைத்தான் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியது. அனைவருக்கும் உரிய நேரத்தில் தடுப்பூசி கிடைக்கச் செய்தல், தடுப்பூசியைப் பெறுவதில் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசிக் கொள்கையின் தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உற்பத்தியாளர்களுக்கு லாபம் அதிகரித்தால் அது உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். சந்தையில் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே போட்டியை உருவாக்கும். இதனால் தடுப்பூசி கிடைப்பது மேலும் அதிகரிக்கும், விலையும் குறையும் என்று இந்தக் கொள்கைக்கு மத்திய அரசு காரணம் சொன்னது.

தடுப்பூசிக் கொள்கையில் மத்திய அரசே கொள்முதல் செய்யும் என்ற நிலையை மாற்றி, சந்தையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைக்குத் திடீரென்று மாறியதற்கான காரணம் எதையும் மத்திய அரசு சொல்லவில்லை.

கொள்கை வகுப்பு என்பது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், நிபுணர்களின் அறிவுரைகள், பயனுரிமையாளர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படியில்தான் கொள்கை உருவாக்கப்பட்டது என்றும் கூறிய மத்திய அரசு, நீதித்துறை அதில் தலையிட்டுக் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியது.
கொள்கை வகுப்பதில் அரசைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை அமர்வு ஒப்புக்கொண்டது. ஆனால், அந்தக் “கொள்கை நியாயத்தின் அளவுகோல்களுக்கு உட்பட்டு இருக்கிறதா, பாரபட்சமான செயல்பாடுகளுக்கு எதிராக உள்ளதா, அனைத்து மக்களின் உயிர் வாழும் உரிமையை அது பாதுகாக்கிறதா என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டிய” கடமை தனக்கு இருப்பதாக அது வலியுறுத்தியது.

இதற்குப் பிறகுதான் அரசு தன் கொள்கையை மாற்றியிருக்கிறது. தடுப்பூசிகளைத் தானே கொள்முதல் செய்து அதில் 75 விழுக்காட்டினை இலவசமாக மக்களுக்குத் தர முன்வந்துள்ளது.

நீதிமன்றங்களின் தலையீடு தடுப்பூசி விஷயத்தில் சந்தையை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மக்களை மையமாகக் கொண்டதாக மாற்ற உதவியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் எழுப்பிய எதிர்ப்புக் குரலும் ஊடக விமர்சனங்களும் சேர்ந்துகொள்ள, இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கும் நீதித்துறைக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.