யாழ். மாவட்ட அரச அதிபராக சிங்களவரை நியமிக்கும் திட்டத்தை நிறுத்துங்கள் : சம்பந்தன்

“தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட அரச அதிபராக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும்.மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்துக்குத் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நியமனத்தை நிறுத்துமாறு கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“யாழ். மாவட்டத்துக்கு விரைவில் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார் என நான் அறிந்துகொண்டேன்.

நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம்,யாழ்.மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர். மேலும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்களாவர்.

இந்தப் பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளராக/அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும்.

மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்துமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க அரசு முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவையும், மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களைக் கருத்தில்கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக/அரச அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஓர் அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.