பெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை – தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணாநகர் முதல் எல்லிஸ்நகர் வரை ரூ.22 லட்சம் மதிப்பிட்டில் கற்சாலை மேம்பாடு செய்தல் பணிகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியில் நிறுவப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தனர்.

மேலும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆதார நிதியுதவி மற்றும் 30 மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘மேகதாது பிரச்சினை மட்டுமல்ல. பாஜகவினர் ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைபாடு எடுக்கக் கூடியவர்கள். எனவே தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். பெகாஸஸ் மிகப்பெரிய பிரச்னை. எந்த பிரச்னையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் பாஜக அரசு, நாடாளுமன்றத்திற்குள் அதனை விவாதிக்க தயாராக இல்லை. இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது மாநில உரிமைகள் குறித்துப் பேசினார். ஆனால் இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்று, புதிய வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என கேட்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பத்திரிக்கையாளர்களின் தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை கொடுக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்னை இது. யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் இதே நிலை தான். சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கும் போது, அதை பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது. தயாராக இல்லை என்று ஏன் சொல்கிறது.

இதனை விவாதிக்கக் கோரி அனைத்து கட்சி தலைவர்களும் ஒட்டு மொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம். ஆனால் அதனை எடுத்து அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கான வாய்ப்புமில்லை. அதனால் தவறு என்பது அரசாங்கத்தின் மேல் தான் உள்ளது. அவர்கள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.