முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்!

முகக்கவசம் அணியாதவர்களை, விரட்டி விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர். இதுவரை 4 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாக தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 80க்கு கீழ் சென்ற பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக நூறை கடந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 126 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் தோறும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் 62 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் லாரி, பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தார். தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனம் பேருந்து, லாரி ஆகியவற்றில் முகக் கவசம் அணியாமல் வந்து அவர்களை விரட்டி விரட்டிப் பிடித்து அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

மேலும் பேருந்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த நடத்துனருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்டத்தில் இன்று 62 இடங்களில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.