நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கினால் மாத்திரமே மீள முடியும் : நளின் பண்டார

“நாட்டை ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்காவது முடக்கினால் மட்டுமே தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து மீள முடியும். எனினும், அரசு இந்த விடயத்தில் முரட்டுத்தனமாகவே செயற்படுகின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரலானது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. நாம் தொடர்ச்சியாக இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைக் கூறி வருகின்றோம். விசேடமாக எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இது குறித்து அனைவரும் கதைப்பதற்கு முன்பாகவே கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டார்.

குறிப்பாக தடுப்பூசிகளை நாட்டுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு அவர் யாவருக்கும் முன்பாகவே
கூறிவிட்டார்.

எனினும், அரசு இவ்விடயத்தில் முரட்டுத்தனமாகவே செயற்பட்டது. இன்றைய நிலவரத்தின்படி நாட்டை ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்காவது முடக்காது நாட்டை மீட்டெடுப்பது என்பது இயலாத காரியம்.

இதனை நாம் கூறவில்லை. சுகாதாரத் துறையில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்றவர்களே அதனைக் கூறுகின்றனர்.

நாட்டில் முதலாவது அலை ஏற்பட்டபோது நாடு முற்றாக முடக்கப்பட்டது. அரைவாசி, கால்வாசியாக முடக்கப்படவில்லை. முழுமையாக முடக்கப்பட்டது. அதன்போது கொரோனா வைரஸ் பரவலை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும், தற்போது அவ்வாறான முடக்கமொன்றை நடைமுறைப்படுத்தாது நாட்டை மீட்டெடுக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச்செல்ல வேண்டும். ஆரம்பத்தில் முழுமையான முடக்கம் தேவையில்லை என்றே நாம் கூறினோம். எனினும், தற்போதைய நிலையில் முழுமையான முடக்கம் இல்லையெனில் கொரோனாத் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாத நிலைமையே ஏற்படும்.

நாம் இந்தப் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்று கூறுகின்றோம். ஏனெனில், இன்றைய நிலவரத்தின்படி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணிக்கின்றனர். இந்த மரண எண்ணிக்கை தொடர்பிலும் எமக்கு சந்தேகமே உள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சரியான முறையில் வெளியிடப்படுவதில்லை என்பதே எமது குற்றச்சாட்டு. நாட்டு மக்களுக்கு இவ்விடயம் தொடர்பிலுள்ள அவதான நிலைமை, பயங்கர நிலைமையை குறைத்து மதிப்பிட்டுக் கூறியதும் அரசு செய்த பாரிய தவறாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.