வறுத்த மீன் குழம்பு எப்படி செய்வது…….

உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குழம்பு மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

வறுத்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ, இஞ்சி சிறிய துண்டு – 2, வர மிளகாய் – 5, கரம் மசாலா – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – 150 கிராம், குழம்பு மிளகாய்த்தூள் – இரண்டு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 3, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு பிடி.

மீனை நன்றாக சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி, தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, வர மிளகாய், கரம் மசாலா, மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து இவற்றை ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள மீனின் மீது அரைத்தெடுத்த மசாலாவை தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு புளியைக் கரைத்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மசாலாவில் ஊற வைத்துள்ள மீன்களை தோசைக்கல்லில் வைத்து மீனின் இரு புறங்களும் நன்றாக சிவந்து வருமாறு பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் புளி கரைசலுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அவற்றை வதக்கிய தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து, மிளகாய் தூளின் பச்சை வாசனை போகும் வரை குழம்பை நன்றாகக் கொதிக்க விட வேண்டும். குழம்பு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள மீன்களை அதில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க வேண்டும். இறுதியாக சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும்.

இதில் வறுத்த மீனை சேர்த்துள்ளதால் அதிலுள்ள மசாலாவின் சுவை குழம்புடன் சேர்ந்து இதுவரையில் நீங்கள் சுவைக்காத சுவையில் ஒரு புது விதமான மீன் குழம்பு தயாராகிவிட்டது. நீங்களும் உங்கள் வீட்டில் ஒருமுறை இவ்வாறு வறுத்த மீன் போட்டு குழம்பு செய்து பாருங்கள். சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடும் பொழுது இதன் சுவை இன்னும் வேண்டுமென்று கேட்கத் தூண்டும் அளவிற்கு அருமையாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.