மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது – மஹிந்தானந்த அளுத்கமகே

நாட்டில் 22 மில்லியன் மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டோம் என்றும் அவர் கூறினார். .

நாட்டின் பொது மக்கள் தமக்கு அவசரகாலச் சட்டம் அவசியமில்லையென தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றாதிருக்க முடியும். நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோரை பாதுகாக்கவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியிருந்தார்.

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. நாட்டு மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதிக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியும்.

அல்ஜசீரா, பி.பி.சி மற்றும் பல்வேறு சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் உணவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எமது நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென அவர்களுக்கு தெளிவாக கூறுகிறோம்.

ஆனால், இங்கு உணவு மாபியா ஒன்றுள்ளது. உணவு மாபியாவை கட்டுப்படுத்ததான் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஆளை உரிமையாளர்களுக்கு 2500 ரூபாதான் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது.

இதனை ஒரு இலட்சம் முதல் 20 இலட்சம் வரை உயர்த்துவதற்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை விரைவில் நிறைவேற்றி தருமாறு கோருகிறோம். ஆறுமாதங்கள் வரை சிறையிலும் அடைக்க முடியும்.சட்டங்களை நிறைவேற்ற குறைந்தது மூன்று மாதங்களாவது செல்லும். அவ்வாறெனின் இந்த போகம் முடிந்துவிடும்.

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒரு சிலரால் நிர்ணயிக்க முடியுமாயின் ஏன் அரசாங்கமொன்று உள்ளது.

ஆகவே, நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.