அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் மஹிந்த யாப்பா அபேவர்தன உரை…

இந்தியாவின் லோக் சபாவினால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நேற்று (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டியதாகவும் “பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள ஜனநாயகத்திற்கு சட்டவாக்தக்தின் பங்கு“ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய லோக் சபாவின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கிய இந்த மெய்நிகர் மாநாட்டில் அனைத்துப் பாராளுமன்றங்களின் சங்கத்தின் தலைவர் திரு.டியுரெட் பச்செக்கோ மற்றும் ஒஸ்ரியா, கயானா, மாலைதீவு, சிம்பாபே, மொங்கோலியா மற்றும் நபீபியா ஆகிய நாடுகளின் சபாநாயகர்களும் உரையாற்றியிருந்தனர். இந்திய பிராந்தியங்களின் சட்டமன்ற சபாநாயகர்கள் பலரும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இம்மாநாட்டில் இணைந்திருந்தனர். இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திரு.தம்மிக தசநாயக்க அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

நவீன யுகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை கௌரவ சபாநாயகர் தனது உரையின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

“இலங்கைப் பாராளுமன்றம் ஆசியாவில் வயது வந்தவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் பழமையான பாராளுமன்றமாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற வகையில் இந்தியாவின் சட்டப்பேரவை பல்வேறு மத, பல்லின சமூகத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பது அயல்நாடான எமக்கு மாத்திரமன்றி ஜனநாயக ஆட்சியின் விற்பனர்களுக்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது” என சபாநாயகர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தியது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பொது மக்களின் ஈடுபாடுகளை அதிகரிக்கும் நோக்கில் திறந்த பாராளுமன்றம் என்ற கொள்கையை இலங்கை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் சபநாயகர் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

“புதிதாக உருவாக்கப்பட்ட தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களைச் சென்றடைவதற்கு பாராளுமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற செயற்பாடுகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கும், ஜனநாயகத்தை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும் குறிப்பாக ஜனநாயகத்தின் கொடியை ஏந்தக்கூடிய எதிர்கால சந்ததியினரான பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இவற்றை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம் ” என்றார்.

“தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் குழுக்களின் செயற்பாடுகளை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்க இலங்கை பாராளுமன்றம் தீர்மானித்ததுடன், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தும் முறையை நோக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது” எனவும் சபாநாயகர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில், “சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடிய துடிப்பான குழு முறைமையை இலங்கைப் பாராளுமன்றம் கொண்டுள்ளது” என்றார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு நாட்கள் குறைக்கப்பட்டாலும் வளமையான பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.