ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமையும் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம் தெரிவிப்பு

திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் சனிக்கிழமையும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வரும் 18ஆம் (நாளை) தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படாததால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட விரும்புவோர், தங்கள் மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள், வேட்பாளர் மட்டுமே சென்று வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை முன்மொழிபவர் மட்டும் வேட்பாளரின் சார்பாக நேரில் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நேற்று ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் வேட்பு மனுத்தாக்கல் மந்தமாகவே நடைபெற்றது.

இந்நிலையில், முகூர்த்த நாளான நேற்று,கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மூவாயிரத்து 489 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆயிரத்து 66 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 பேர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் என 4,597 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, இரண்டு நாட்களில் வெவ்வேறு பதவிகளுக்காக, 4,975 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.