உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே சர்வதேசத்தை நாடுகின்றனர் மக்கள்! ஜே.வி.பி. சுட்டிக்காட்டு.

நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்காதபடியால்தான் இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்குச் எடுத்துச் செல்கின்றனர் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு ஐ.நாவில் கூறும் கதைகளும் நாட்டுக்குள் வெளியிடும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐ.நாவில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்தை யதார்த்தமானதாக மாற்ற நாட்டுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்காமை காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படாமை கத்தோலிக்க மக்களின் பிரச்சினை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் பிரச்சினையாகும்.

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி கோட்டாபய. ‘இலங்கையில் பயங்கரவாத வன்முறைகள் மீண்டும் இடம்பெற இடமளிக்கமாட்டோம்’ என்ற உத்தரவாதத்தை வழங்கியமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆனால், சரியாக விசாரணைகளை மேற்கொண்டு பலியானவர்களுக்கு நீதியை நிலைநாட்டினால் மாத்திரமே மீண்டும் இத்தகைய சம்பவம் இடம்பெறுவதைத் தடுக்க முடியும்.

இனவாதத்தைத் தூண்டும் குழுக்களை வெளியில் போடுவதற்குப் பதிலாக, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை சரி வர மேற்கொள்ளுமாறு நாம் அழுத்தம் கொடுக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.