எந்தவொரு நாடும் இலங்கையை மிரட்டிப் பணிய வைக்க முடியாது! பீரிஸ் ஆக்ரோஷம்.

“எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் பல சர்வதேச நாடுகளின் தலைவர்களையும், அந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனித்தனியாகச் சந்தித்தோம். இதன்போது எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

வெளிநாடுகளைப் பகைத்துக்கொண்டு செயற்படும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. எதிரணியினர் கூறுவது போல் வெளிநாட்டுக் கொள்கையை நாம் இலங்கைக்கு எதிராக மாற்றியமைக்கவில்லை. அவர்கள் கூறுவதுபோல் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கமும் எமக்கு இல்லை.

சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கவே இலங்கை அரசு விரும்புகின்றது. இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாடுகளுடன் உறவை வளர்ப்போம். எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் தொடர்பில் எமது அரசின் நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெரிவித்துவிட்டோம். வெளியகப் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.