வெள்ளைப்பூண்டு மோசடியை திறந்த மனதுடன் ஏற்கின்றோம் அமைச்சர் பந்துல அறிவிப்பு.

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைக ளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு தொடர்பில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கின்றோம். சதொச நிறுவனத்தில் மோசடி இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.

சதொச நிறுவனத்தை எமது அரசு பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருந்தது. அதேபோன்று பொருட்களைப் பரிமாற்றும் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு 8 பில்லியன் செலுத்தல்களும் இருந்தன. ஆகவே, 28 பில்லியன் இழப்புடன்தான் சதொச நிறுவனத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டோம். கடந்த ஆட்சிக்கு முன்னர் சதொச நிறுவனம் இலாபம் ஈட்டியதொரு நிறுவனமாகும். 28 பில்லியன் ரூபா என்பது எயர் லங்கா நிறுவனத்தின் பெறுமதியை போன்றதொரு பாரிய இழப்பாகும்.

ஊழல், மோசடிகளை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையின் காரணமாகதான் இவ்வாறு பாரிய இழப்புகளை சதொச நிறுவனம் சந்தித்துள்ளது. கடந்த ஜனவரியாகும்போது சதொச நிறுவனத்தின் ஊழிர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் எனது தலையீட்டில் இங்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். துறைகத்தில் இருந்து சதொச நிறுவனத்துக்கு அத்தியாசியப் பொருட்கள் வழங்கும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளோம். சதொச நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்கினால் அவற்றை திருட்டு வழியில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காகவே இந்தப் பணியை நிறுத்தியுள்ளோம்.

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை அரசு பொறுப்பேற்று சதொச நிறுவனத்தின் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாம் பொறுப்பேற்று ஊழில், மோசடிகளின் பொருட்களை எவ்வாறு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதென கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன .

இங்கு ஏற்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கு நாம் எவ்வித அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. சி.ஐ.டி.யினர்தான் அழைத்துள்ளனர். அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியாே அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை. சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவே இதனை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாமென பிரதமரும் அறிவுறுத்தியுள்ளார். உரிய வகையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.