அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களிடம் கலந்துரையாடவும்…

அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை அமைச்சரவை அமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடுங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பார்க்கும் திட்டங்களுடன் அமைச்சரவை அமைச்சின் செயலாளருடன் இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (25) தெரிவித்தார்.

அதற்கமைய குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடும் விடயங்களை காலாண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான செயற்திறன் மிக்க வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் நான்கு திட்டங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூன்று அரச நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டின் திட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் கூட்டம் அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு 55452 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய குறித்த நிதியை இவ்வருட இறுதிக்குள் திட்டங்களுக்காக செலவிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்போது சில திட்டங்களை செயற்படுத்தும் போது அத்தியவசிய ஆட்சேர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஊதியம் வழங்குவதற்கு அந்தந்த நிறுவனங்களுக்கு வருமானம் இருப்பின் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை. தேவையான நபர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.

பாணதுறை நகரம் நீரில் மூழ்குவதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித திட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படாமை குறித்து பிரதமர் இதன்போது அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

எதிர்காலத்தில் பாணதுறை நகரம் நீரில் மூழ்காதிருப்பதற்கு திட்டமொன்றை வகுத்து துரித கதியில் செயற்படுத்துமாறு கௌரவ பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

நீர்ப்பாசன சுபீட்ச திட்டத்தின் கீழ் ஆறு மாவட்டங்களில் 65 குளங்களை அடையாளம் கண்டு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கௌரவ பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த 23 குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர். இவ்வாறு புனரமைக்கப்படும் குளங்களின் பெயர் பட்டியல் மற்றும் மேற்படி குளங்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன என்பன தொடர்பான அறிக்கையை தனக்கு வழங்குமாறு பிரதமர் தெரிவித்தார்.

பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் உடனடி கவனத்தை ஈர்ப்பதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது.

கப்பல்களின் மூலம் ஏற்படுத்தப்படும் கடல்சார் சூழல் பாதிப்பை தடுப்பதற்கு 65 சதவீத முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர அவர்கள் குறிப்பிட்டார்.
எம்.வீ.எக்ஸ்பிரஸ் பர்ள் கப்;பலினால் இலங்கையின் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று திருமதி லஹந்தபுர அவர்கள் தெரிவித்தார்.

மேற்படி கப்பல் விபத்தால் ஏற்படுட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிட்டு இழப்பீடு பெறுவதற்கு லண்டன் சீபாஸ் நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் மாதிரிகளையும், பிரான்சின் செட்ரி நிறுவனத்திற்கு உயிரியல் மாதிரிகளும் அனுப்பப்பட்டுள்ளது இதன்போது குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பில் இரு பேராசிரியர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட 40 பேரை கொண்ட நிபுணர் குழுவின் அடிப்படை நிபுணர் குழு அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக திருமதி.லஹந்தபுர அவர்கள் குறிப்பிட்டார்.

முன்னேற்ற மதிப்பாய்வின் நிறைவில், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிதி அறிக்கை படிவத்தை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் பிரதமர் கையளித்தார்.

குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் மொஹான் பீ. த சில்வா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.எல்.ஏ.விஜேசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.