கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்.

புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

இந்த புயலை தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் இந்த ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது கொட்டிய கன மழையால் வான்கூவர் நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து, கரை புரண்டோடுகிறது. வான்கூவர் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் ஆறாக ஓடும் வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதப்பதை காண முடிந்தது.

வான்கூவர் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக கனடாவின் மற்ற பகுதிகளுடன் வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் பல சிக்கின.

இதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 2 பேர் மாயமாகி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது எத்தனை வாகனங்கள் சிக்கின என்பது இன்னும் உறுதி செய்யப்படாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளில் சிக்கியிருந்த 300-க்கும் அதிகமானோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

கனடாவின் மிகப்பெரிய துறைமுகம் வான்கூவரில் உள்ளது. அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரெயில் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைநகர் ஒட்டாவாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும் “எங்களால் இயன்ற எல்லா விதத்திலும், வடிவத்திலும் நாங்கள் உதவியாக இருப்போம்” என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில்தான் பிரிட்டிஷ் கொலம்பியா, கோடையின் தீவிர அனல் காற்றால் 500-க்கும் அதிகமான மக்களை பறிகொடுத்திருந்தது. அங்கு காட்டுத்தீயால் நகரின் பல இடங்கள் அழிந்த நிலையில், இப்போதைய மழை, புயல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.