சீனாவுக்கு எதிரான பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்கா.

சீனாவுக்கு எதிரான பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவிலும் ஆஸ்திரேலியாவிலும் தங்களது ராணுவ தளங்களை மேம்படுத்த அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அந்த நாட்டுக்கு எதிரான ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்த பென்டகன் முடிவு செய்துள்ளது.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் ராணுவ நிலைப்பாடு குறித்து நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளத்தின் திறனை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நாட்டில் கூடுதலாக போர் விமானங்களும் குண்டு வீச்சு விமானங்களும் நிறுத்தப்படும். ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மேம்படுத்தப்படுவதோடு, ஆயுதப் போக்குவரத்துக்கான ஒருங்கிணைப்பும் அதிகரிக்கப்படும்.

இதுதவிர, வடக்கு மாரியானா தீவுகளிலுள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் பென்டகன் முன்னுரிமை அளிக்கும்.
இதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் ராணுவ கூட்டு நடவடிக்கைகளின்போது அமெரிக்காவுக்கு அதிக அனுகூலம் கிடைக்கும்.
பென்டகனின் இந்த நடவடிக்கைகளில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கனிம வளங்கள் நிறைந்த தென்சீனக் கடல் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மலேசியா, புருணை, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடும் சில இந்தோ-பசிபிக் தீவுகளும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் விதமாக அங்கு சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கியும் ஏற்கெனவே உள்ள தீவுகளில் ராணுவ மையங்கள் அமைத்தும் உள்ளது.

எனினும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையாகத் திகழும் இந்தப் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. தென் சீனக் கடலை சர்வதேச நாடுகள் தங்களது வழித்தடமாகப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தென்சீனக் கடல் வழியாக தங்களது போர்க் கப்பல்களை அமெரிக்கா அவ்வப்போது அனுப்பி வருகிறது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் (ஆக்கஸ்) இணைந்து உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், சீனாவுக்கு எதிரான பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.