ஒமைக்கரான் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்?

தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகா திரும்பிய இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 66 வயது ஆண் ஒருவருக்கும் 46 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்றும் கர்நாடக சுகாராதத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேரிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 250 க்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருந்தது தெரியவந்த நிலையில், அவர்கள் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாகவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாக கூறி இருக்கும் அவர், ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களின் தொடர்புகளை கண்காணித்து கண்டுபிடிப்பதே தங்களின் கடமை என்றும் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச விமான பயணிகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.