RRR திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் ஒத்திவைப்பு.

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் “RRR”. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

இந்த RRR படம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 1 முதல் ஜனவரி 10 வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (01.04.2022) ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.